இலங்கை கடற்படையுடன் தமிழக மீனவர்களை தாக்கியது சீனர்கள்- இல.கணேசன்

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து சீனர்களும் தாக்கியதாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இலங்கை கடற்படையினரி்ன் தாக்குதல் காரணமாக கடலுக்கு செல்ல மறுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட 5 மாவட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தமிழக அரசு கொடுத்த உறுதிமொழியின் பேரில் 300 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குத் திரும்பினர். ஆனால், அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது மூன்று பெரிய கப்பல்கள் உட்பட 9 கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

அவர்களிடமிருந்து உயிர் பிழைக்கும் நோக்கத்தில் மீனவர்கள் கரையை நோக்கி வேகமாக திரும்பினர். அப்போது அவர்களை துரத்தி வந்த இலங்கை கடற்படை 5 படகுகளில் வந்த 21 மீனவர்களை சுற்றி வளைத்து தாக்கினர். வெற்றிவேல், சுடலைமணி, பாண்டி, முனியசாமி ஆகிய நான்கு பேரையும் சிறைபிடித்து சென்று தலைமன்னார் நீதிமன்றத்தில் நிறுத்தியது. வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் நான்கு பேரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சீனர்களும் இருந்தனர்..

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் இல.கணேசன், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இலங்கை கடற்படையினர் மட்டுமல்ல. அவர்களில் சீனர்களும் இருந்ததாக மீனவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இது நாட்டின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலாகும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *