மாற்றுக் கொள்கைகளுக்கான நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளர் பீ.சரவணமுத்துவுக்கு விடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் துரித விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
இந்த கொலை அச்சுறுத்தல் கடிதம் அவருக்கு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கிடைத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஐ.நா.வின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கை வரும் நேரம் பார்த்து சுமார் ஒரு மாத காலத்தின் பின்னர் இத்தகவல் நேற்றைய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை நாம் ஆராய வேண்டும். இதன் பின்னணியில் ஏதோ ஒரு நிகழ்ச்சித் திட்டம் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
கொலை அச்சுறுத்தல் உண்மையோ பொய்யோ எப்படியிருந்தபோதும் அது பற்றி நாம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தோம். எனவே அது பற்றி பூரண விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இனியொருபோதும் ஆட்சியைக் கைப்பற்றமுடியாத நிலையில் நாட்டு மக்களின் ஆதரவை இழந்துள்ளதாலேயே ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று அரசுக்கெதிரான பொய்க் குற்றச்சாடடுக்களை சுமத்திவருகின்றர். பொய்களையே மீண்டும் மீண்டும கூறி அவற்றை உண்மைப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர்.
இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. கே.பி. கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாh. புலிகளின் வலைப்பிண்ணலைத் தகர்க்க சர்வதேச நாடுகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடததிவருகிறோம். 30 வருட பயங்கரவாத நடவடிக்கையால் நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு ஓர் இரவுக்குள் தீர்வு கண்டுவிட முடியாது.