வவுனியா நிவாரண கிராமங்கள் – க.பொ.த. பரீட்சை: 10 ஆயிரம் மாணவரை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

150909students1.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் க. பொ. த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் 10,000 மாணவர்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின. கொழும்பிலிருந்து கொண்டு செல்லப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் நேற்று முகாம்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்திற்கமைய மேற்படி பரீட்சைக்குத் தோற்றும் நிவாரண கிராமத்திலுள்ள மாணவர்கள் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்வதற்கு விபரங்களை வழங்குமாறு வலய கல்வி பணிப்பாளர் திருமதி ரஞ்சனி ஒஸ்வர்ல்ட் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் பரீட்சைக்குத் தோற்றும் முகாமிலுள்ள 6250 மாணவர்களுக்கும், 3750 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்படவுள்ள விசேட அடையாள அட்டைகளுக்கான புகைப்படம் எடுத்தல் மட்டும் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளையும் வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.

மேலும் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காக தளபாட பற்றாக்குறை நிலவுவதால் கல்வி அமைச்சு மேலதிக தளபாடங்களை அனுப்பி வைக்கவுள்ளது.

வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவைச் சந்தித்து பேச்சு நடத்தியதன் பலனாகவே தளபாடங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிவாரணக் கிராமத்திலுள்ள 10,000 மாணவர்களினதும் பதிவுகள் முடிவடைந்தவுடன் எதிர்வரும் 28ஆம் திகதி பரீட்சை திணைக்களத்தில் கையளிக்கப்படும் அதன் பின்னரேயே பரீட்சை நிலையங்கள் அமைப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும்.

சரணடைந்தவர்களுள் 160 பேர் உட்பட பாடசாலை மாணவர்கள் 6250 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

கடந்த இர ண்டு அல்லது மூன்று வருடங்களாக பரீட்சைக்குத் தோற்ற முடியாமல்போன மாணவர்கள் உட்பட தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக சுமார் 3750 மாணவர்கள் உள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *