மலையகப் பெருந்தோட்டங்களில் கடந்த இரு வார காலமாக இடம்பெற்று வந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டங்கள் நிறைவடைந்து நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளது. தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்சினை முற்றுப் பெற்றுள்ளதையடுத்து தோட்டங்களில் 90% மக்கள் வழமையான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
நுவரெலியா மாவட்டத்தின் அனைத்துத் தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். தீபாவளிப் பண்டிகை வருவதனாலும், சம்பள நிலுவையைப் பெறவிருப்பதனாலும் தொழிலாளர்கள் மும்முரமாகத் தொழிலுக்குச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. வேலை நாட்கள் குறையுமானால் தீபாவளிப் பண்டிகை காலத்தில் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும். இதனால் தோட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைத்து நன்மைகளைப் பெறும் நோக்கில் தொழிலாளர்கள் செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹட்டன், பொகவந்தலாவை, புளியாவத்தை பகுதிகளில் சில தோட்டங்களில் இன்னமும் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சில தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்கள், பொகவந்தலாவை, பொகவான, செல்வகந்தை உள்ளிட்ட தோட்டங்களில் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு, ஒத்துழையாமை போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்