அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகளை இம்மாதம் 23ம் திகதி தொடக்கம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வியமைச்சின் உடற்கல்வி விளையாட்டுப் பிரிவி மேற் கொண்டுள்ளது.
கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் தொடர்ச்சியாக 5 தினங்கள் நடத்தப்படவுள்ள இந்த போட்டி நிகழ்ச்சிகள் 27ம் திகதி நிறைவடைய உள்ளதாக உடற் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைக்கு பொறுப்பான கல்விப் பணிப்பாளர் எல்.கே. ஜயவீர அறிவித்துள்ளார்.
மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர்.
போட்டியாளர்கள் அனைவரும் தமது வயது மற்றும் அடையாளம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டையையும், பிறப்புச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர். மாகாண மட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டியாளர்களை தவிர பட்டியலில் வேறு எவரையும் மாற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
போட்டியாளர்களின் பெயர் மாற்றம் மற்றும் நிகழ்ச்சி மாற்றம் செய்ய வேண்டுமாயின் முன்கூட்டியே தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.