வவுனியாவில் இடம்பெயர்ந்து தங்கியுள்ளவர்களுள் ஆயிரம் குடும்பங்கள் இன்று (20) தமது சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்படுகின்றன. இதேவேளை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 25ம் திகதி முன்பதாக சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக இனங்காணப்பட்ட 35 கிராமங்களில், 28 கிராமங்களுக்கே ஆயிரம் குடும்பங்கள் இன்று அனுப்பிவைக்கப்படுவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் நாலாயிரம் பேரை சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நிகழ்வு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தலைமையில் வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெறுகின்றது. இதில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்களென அரச அதிபர் தெரிவித்தார்.
வவுனியாவில் பல்வேறு கிராமங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து உறவினர்களின் இல்லங்களிலும், வேறு இடங்களிலும் தங்கியுள்ளவர்களே இன்று தமது சொந்தக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக அரச அதிபர் திருமதி சார்ன்ஸ் தெரிவித்துள்ளார். சொந்த இடம் திரும்புவோருக்கு, அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் உலருணவுப் பொதிகளை வழங்குகின்றது. மக்கள் மீளக் குடியமர்வதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் நாளை (21) திங்கட்கிழமை திறந்துவைக்கப்படுகின்றது. இதுவரை காலம் வவுனியாவில் இயங்கிய இந்த அலுவலகம் தற்போது உரிய இடத்தில் இயங்கவிருக்கின்றது.
இதற்கான பாதுகாப்பு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் எதிர்வரும் 25ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான பாதுகாப்பு அனுமதி நாளை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் செயலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் வவுனியாவிலிருந்து காலை கிளிநொச்சி சென்று மாலையில் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஒரு வார காலத்திற்குள் தங்கியிருந்து பணியாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
palli
நன்றியுடன் பாராட்டுக்கள்;