மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 6 வது சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடப்பதாக இருந்தது.
ஆனால் அங்கு நிலவும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டு அது இப்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கிய இந்த கிரிக்கெட் திருவிழா அக்டோபர் 5ந் திகதி வரை நடைபெறுகிறது.
முந்தைய போட்டிகளில் குட்டி அணிகளும் பங்கேற்றன. ஆனால் தற்போது முதல் முறையாக தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்குவதால் ஒவ்வொரு ஆட்டங்களும் விருந்து படைப்பதாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ் தான், நடப்பு சம்பியன் அஸ்திரேலியா, மேற் கிந்திய ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தேர்வாகும்.
தற்போதைய நிலவரப் படி ரேங்கில் முதல் 3 இடங்களை வகிக்கும் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகளுக்கே கோப்பையை வெல்வதில் முன்னணியில் இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால் 20 ஓவர் உலக கோப்பையில் யாருமே எதிர்பார்க்காத பாகிஸ்தான், இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்தது போல் மீண்டும் அவை இங்கு அதிசயம் காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
சமீபத்திய தொடர்களில் அடிப்பட்ட நியூசிலாந்து இதுவரை எந்த ஐ.சி.சி. கோப்பையும் வெல்லாத இங்கிலாந்து ஆகிய அணி கள் ஏதேனும் மாயா ஜாலம் காட்டுமா என்பதை பார்க்கலாம். ஒப்பந்த பிரச்சினை தீர்வு காணப்படாததால் கெய்ல், சர் வான், சந்தர்பால், பிரா வோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாம் 2ம் தர அணியாக களம் இறங்கி உள்ள மேற்கிந்திய அணி யின் நிலைமை மட்டுமே இங்கு பரிதாபமாக உள்ளது. ஆனால் இந்த அணி ஏதேனும் வெற்றி பெற்றாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.
இந்த தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டமாக உள்ளது. இதே போல் இந்தியா- அவுஸ்திரேலியா மோதலிலும் அனல் பறக்கும்.
ஒரு நாள் போட்டியில் விறுவிறுப்பை அதிகரிக்க மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த சம்பியன்ஸ் போட்டி ஐ.சி.சி. மிகவும் முக்கியமான போட்டியாக கருதுகிறது. இந்தப் போட்டியின் வெற்றி, அதற்கு கிடைக்கும் வரவேற்பு ஆகியவையே ஒரு நாள் போட்டியின் எதிர்கால தலைவிதியாக அமையும்.