கிளி நொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களை மீளக்குடியமர்த்தும் அதேநேரத்தில் சிவில் நிர்வாகத்தையும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக முல்லைத்தீவு கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இதற்கமைய துணுக்காய், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகக் கட்டடங்களை திருத்துவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த இரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மாவட்ட நிர்வாகத்தையும் ஏற்படுத்துவதற்கு ஏதுவாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு இந்த மாதம் 25ஆம் திகதியும் அடுத்த மாதம் 15ஆம் திகதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களை மீளகுடியமர்த்தும் அதே சமயத்தில் சிவில் நிர்வாகமும் தோற்றுவிக்கப்படுமென அரச அதிபர் திருமதி சுகுமார் கூறியுள்ளார்.
மீள்குடியேற்றம் செய்வதற்கு முன்பதாகக் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியது பாரிய சவாலான விடயமாகும். அதற்கு முன்பதாக கட்டடங்களின் அமைவிடம் குறித்து அறிந்து அவற்றுக்கான பாதைகளையும் அடையாளம் கண்டு அதன்பின்னர் கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரச அதிபர் கூறியுள்ளார்..
கட்டடங்களைத் திருத்துவதற்குத் தேவையான மூலப் பொருள்களைக் கொண்டு வந்துள்ளதுடன், மக்களைக் குடியேற்றியதும் சிவில் நிர்வாகத்தையும் தோற்றுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்தி வருவதாகவும் அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தை மீளத் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரம், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தைத் திறப்பதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
palli
கேக்க நல்லாய் இருக்கு. ஆனால் அங்கு நிலைதான் தலைகீழாய் இருக்கு; ஏதோ உங்களால் முடிந்த அளவுக்கு நீங்களும் பேட்டி கொடுத்த படிதான் இருக்கிறியள்; ஏதாவது அந்த மக்களுக்கு நல்லது செய்யுங்கோ; மானிட சமுதாயம் வாழ்த்தும்,
இராவுத்தர்
போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம் முல்லைத்தீவு ஆகும். யுத்தம் உக்கிரமாக இடம்பெற்ற பிரதேசம் அதுவாகும். அங்கிருந்தே கூடுதலான மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர். வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரில் அநேகமானோர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தோராவர்.
அதேசமயம் முல்லைத்தீவு பிரதேசமக்களை மீளக்குடியேற்றும் பணியே தற்போது சற்றுத் தாமதத்துக்கு உள்ளாகியுள்ளது. அப்பகுதி மக்களை துரிதகதியில் மீளக் குடியேற்றுவதில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ள போதிலும் அங்குள்ள சூழல் நிலைமையே தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது.
முல்லைத்தீவு பிரதேசம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க அங்கு பெருமளவிலான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதே தாமதத்துக்குக் காரணமாகும்.
பெரியளவிலான கண்ணிவெடிகளும் சிறிய ரக மிதிவெடிகளும் எண்ணிலடங்காத அளவில் புதைக்கப்பட்டிருக்கும் பிரதேசமொன்றில் மக்களை அவசர அவசரமாக அழைத்துச் சென்று மீளக்குடியேற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. அவ்வாறு மக்களை மீளக்குடியேற்றுவது ஆபத்து மிக்கதாகும்.
முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படுவதே முதலில் பிரதானமானது. கண்ணிவெடி ஆபத்து முற்றாக நீக்கப்பட்ட பின்னர் அங்கு மீளக்குடியேறுவதிலேயே மக்கள் விருப்பம் கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு மீள்குடியேற்றத்துக்குத் தடையாக கண்ணிவெடி அபாயம் உள்ள போதிலும், இடம்பெயர்ந்த மக்கள் உடனடியாகக் குடியமர்த்தப்பட வேண்டுமென ஒருசில தரப்புகள் வலியுறுத்தி வருகின்றன. உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் இத்தகைய கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அரசுக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கும் உள் நோக்கம் கொண்டதாகவே இக்கருத்துகளை நோக்க வேண்டியுள்ளது.
வவுனியா மாவட்டம் உட்பட வன்னியின் பல்வேறு பிரதேசங்களிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டிலிருந்து நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. அப்பணி முடிவடைந்ததும் முல்லைத்தீவு மக்களும் மீள்குடியேற்றப்படுவது துரிதப்படுத்தப்படும்.
மீள்குடியேற்ற விவகாரத்தை சில தரப்புகள் சுய இலாபத்துக்காகப் பயன்படுத்த முனைகின்றன. ஆனாலும் மக்கள் பாதுகாப்புக் கருதி அரசுக்கென்று பாரிய பொறுப்பு உண்டு. அரசு தனது பொறுப்பிலிருந்து ஒருபோதும் விலகிச் சென்று விட முடியாது.வன்னியில் இடம்பெயர்ந்திருக் கும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் அரசாங்கம் தனது நிகழ்ச்சித் திட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கே முன்னுரிமையளித்து செயற்பட்டு வருகின்றமை வெளிப்படையாகத் தெரிகிறது.
வவுனியா மாவட்டத்தில் மீள்குடியேற்றத்துக்கென எல்லாமாக முப்பத்தைந்து கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் இதுவரை இருபத்தெட்டு கிராமங்களில் மீள்குடியேற்றப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய கிராமங்களைச் சேர்ந்த மக்களையும் மீள்குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளில் அரசாங்கம் துரிதமாக ஈடுபட்டு வருகிறது.
கடந்த கால யுத்த சூழலின் போது முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர். வடமாகாண மீள்குடி யேற்றத்தைப் பொறுத்தவரை அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே காலப் பகுதியில் உடனடியாக மக்களை மீளக் குடியேற்றுவதென்பது சாத்தியமானதல்ல.– இரணைப்பாலை இராவுத்தர்