சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாராளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கப்படவிருக்கும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் தொடர்பான திருத்தச் சட்ட மூலங்களுக்கு அமையவே இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சட்ட ரீதியாக மற்றும் சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஆட்சேர்ப்போர் மீது கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருத்த சட்டமூலம் அமைந்துள்ளது. இந்தத் திருத்த சட்ட மூலம் எதிர்வரும் வியாழக்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் போலி முகவர் நிலையங்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா வீதம் தண்டப் பணம் அறவிடவும் ஆகக் குறைந்தது மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கும் வகையிலும் சட்டங்களை மீளதிருத்தியமைத்துள்ளது. இதேவேளை, சட்ட விரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணத்திலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய கொள்கைகளின் அடிப்படையில், தகுதியுடைய ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து ஏமாற்றிய ஒருவருக்கு 1500 ரூபா முதல் 20 ஆயிரம் ரூபா வரையில் தண்டப் பணம் அறவிடப்படும்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் துப்பறிபவர்களின் உதவியுடன் தேவையான சந்தர்ப்பத்தில் அனைத்து முகவர் நிலையங்களையும் அதன் ஆவணங்களையும் சோதனையிட வேலை வாய்ப்பு பணியகம் அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டுக்கு பணியாட்களை அனுப்புவதில் இலங்கை முதலிடத்தில் திகழ்கின்றது. தற்போது வெளிநாடுகளில் வேலை செய்யும் 1.6 மில்லியன் இலங்கைப் பணியாளர்களினால் 35 சதவீதமான அந்நியச் செலாவணி நாட்டுக்கு கிடைக்கின்றது.
தற்போது நாடளாவிய ரீதியில் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப் பதனை போலி முகவர் நிலையங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன.