பெர்லினில் நடைபெற்ற உலக தடகள 800மீ. ஓட்டத்தில் முதலிடம் வந்து தங்கம் வென்ற தென் ஆப்பிரிக்க வீராங்கனை கேஸ்டர் செமென்யாவின் உடலமைப்பில் கோளாறு உள்ளது, அவர் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை என்று கூறி அவர் மீது பாலின பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து ஏமாற்றமடைந்த தென் ஆப்பிரிக்க அரசு இந்த விவகாரத்தில் நீதி வழங்குமாறு ஐ. நா.விடம் முறையிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அமைச்சர் நொலுதாண்டொ மெயெந்தே சிபியா ஐ. நா.விடம் இது குறித்து புகார் செய்துள்ளார். 800மீ ஓட்டத்தில் முதலிடம் பெற்ற செமென்யாவை தென் ஆப்பிரிக்கா முழுதும் மக்களும், அரசியல் தலைவர்களும் போற்றிப் புகழ்ந்து, கொண்டாடி வருகின்றனர். நெல்சன் மன்டேலாவையும் அவர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் செமென்யா மீது நடத்தப்பட்ட பாலின சோதனை பெண்ணினத்துக்கு எதிரானது என்றும், நிறவெறித்தனமானது என்றும் சாடியுள்ளது. சோதனை முடிவுகளை ஐ.ஏ.ஏ.எஃப். இன்னமும் வெளியிடவில்லை. ஆனால் முடிவுகள் செமென்யாவிற்கு சாதகமாக வராவிட்டாலும் அவரது சாதனையை திரும்பப் பெறப்போவதில்லை என்று ஐ.ஏ.ஏ.எஃப். தெரிவித்துள்ளது. ஆனால் அவர் வேறு எந்த ஓட்டப்பந்தயங்களிலும் கலந்து கொள்ள முடியாது.
இதற்கிடையே அவருக்கு ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இரண்டுமே இருப்பதாக ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதும் இந்த விவகாரத்தை சர்ச்சைக்குரியதாக்கியது. இந்த நிலையில்தான் தென் ஆப்பிரிக்க அரசு ஐ. நா.விடம் தீர்வு கோரியுள்ளது.