உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலின் அடுத்த அவதாரம் தலைதூக்க தயாராகி விட்டது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பன்றிக் காய்ச்சலின் இரணடாவது பரிமாணம் இது. இந்த புதிய வகை ஹெச்1 என்1 வைரஸ் காய்ச்சல் உலகின் வட பகுதி நாடுகளில் ஓசைப்படாமல் பரவி வருகிறது. சில நாடுகளில் இந்நோயால் 15 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஜப்பானில் மிக கடுமையாகப் பரவிய பன்றிக் காய்ச்சல் குளிர் காலங்களில் உலகின் தென் பகுதி நாடுகளில் வேகமாக பரவியது. இதனால் முன்னெச்சரி க்கை நடவடிக்கைகள் எடுக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.
இப்போது, வட பகுதியில் உள்ள நாடுகளில் இப்பன்றிக் காய்ச்சல் புதிய பரிமாணம் எடுக்க ஆரம்பித்துள்ளது. நல்ல உடல் ஆரோக்கியமுள்ள இளைய நடுத்தர வயதினர் இந்நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நேரடியாக நுரையீரலைத் தாக்கி சுவாச மண்டலத்தை செயலிழக்க வைக்கிறது. வீரியமிக்க இந்தப் புதுவகை பன்றிக் காயச்சலை போக்க மருத்துவ செலவும் அதிகமாகும். இந்தப் புதிய வகை நோய் பரவுவது எப்படி என்பது தெரியவில்லை. எனினும், சுகாதாரமற்ற வாழ்க்கை, ஆஸ்துமா, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவைகளால் இக்காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது.
வெப்ப மண்டல நாடுகளில் இது வேகமாகப் பரவும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்ற வைரஸ் காய்ச்சல்களைவிட நான்கு மடங்கு வேகத்துடன் இந்தப் புது வகை பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. பிற வைரஸ் காய்ச்சல்கள் ஆறு மாதங்களில் தாக்கும்.
இது ஆறே நாட்களில் தாக்கி விடுகிறது. இதன் தாக்குதலைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவதற்கு முன் கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை 2,180 பேர் இறந்துள்ளனர். இதற்கான தடுப்பூசிகள் தயாராவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்கரெட் சான் கூறினார்.