தெனியாய – இத்தகந்த லங்காபேரி தோட்டத்தைச் சேர்ந்த இருவர், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டவர்களாவர்.
இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். ஏ. குலரட்னவின் கண்காணிப்பின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மதிவக தெரிவித்தார்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்