உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு நாடு தழுவிய ரீதியில் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் அக்டோபர் 3 ஆம் திகதி வரை சுற்றுலா வாரத்தை கொண்டாட தீர்மானித்துள்ளது. இவ்வாரத்தினுள் சுற்றுலா மற்றும் உல்லாசப் பயணத்துறை தொடர்பாக சூழலுடனும் அதனை சார்ந்த சமூகத்துடனும் நல்லுறவை பேணிப்பாதுகாப்பதுடன் உல்லாசப் பயணத்துறையை பிரபல்யப்படுத்துவதுமே இதன் பிரதான நோக்கமாகும்.
வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தற்போது ஓரின சுமுக நிலை ஏற்பட்டுவருவதால் வெளிநாட்டு மற்றும் உள்ளூரைச் சேர்ந்த உல்லாசப் பிரயாணிகள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மேலும், மகிந்த சிந்தனையின் அடிப்படையில் தேசிய அபிவிருத்தி கொள்கைக்கு அமைவாகவே சுற்றுலாத்துறை அமைச்சு பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் உல்லாசப் பிரயாணிகளை கவரக்கூடிய இடங்களை மேலும் அபிவிருத்தி செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு பாடசாலை மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நடத்திய சித்திரம், கட்டுரை மற்றும் சுவரொட்டி போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசில்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள சுற்றுலா வாரத்தின் இறுதிநாள் நிகழ்வின் போது வழங்கப்படும்.