முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி அவர்களை சிவில் வாழ்வில் மீள ஒருங்கிணைப்பதற்கான யோசனைகளை உள்ளடக்கிய தேசிய கொள்கைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பல்வேறுபட்ட தரப்பினருடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு இந்த யோசனைகள் தயாரிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சு நேற்று திங்கட்கிழமை இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தத் தேசிய கட்டமைப்பு யோசனைகளில் முக்கியமாக வடிவமைக்கப்பட்டிருப்பது முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயமாகும். இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் அரசின் சர்வதேச கடப்பாடுகளின் பிரகாரம், முன்னாள் போராளிகளுக்கு உதவுதல், பாதுகாப்பு அளித்தல் என்பனவற்றுக்கான பொறுப்பும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நிலையான சமாதானம், நல்லிணக்கம், சமூகத் தொடர்பாடல், முன்னாள் போராளிகளுக்கான தொழில் வாய்ப்பை அதிகரித்தல், சமூக, பொருளாதார ரீதியில் அவர்கள் ஓரம்கட்டப்படும் ஆபத்தைக் குறைத்தல், அத்துடன் போருக்குப் பின்னர் இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குதல் என்பனவும் இந்தக் கட்டமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கட்டமைப்பு மற்றும் முன்னாள் போராளிகளை சிவில் வாழ்வில் மீள ஒருங்கிணைத்தலின் முக்கியத்துவம் என்பன இலங்கை அரசும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனும் கடந்த மே மாதம் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.