காலி ஹிக்கடுவை கடற்கரைப் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற ‘ஹிக்கா’ பண்டிகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என போலியானவற்றை வெளியிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த அதிகாரிகள் என்று பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கடந்த ஜுன் மாதம் அரசின் அனுசரணையின் பேரில் இடம்பெற்ற இந்த ‘ஹிக்கா’ பண்டிகையின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சில வெளியிடப்பட்டன. போலியாகத் தயாரிக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை சுற்றுலா சபை அதிகாரிகள் சிலர் இரகசிய பொலிஸாரிடமும் பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரிடமும் முறையிட்டனர். அவர்கள் நடத்திய விசாரணைகளின் அடிப்படையிலேயே அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு தாய்லாந்து கடற்கரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டே ‘ஹிக்கா’ பண்டிகையின் போது எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் புகைப்படங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.