த‌மிழக ‌மீனவ‌ர்களை ‌விடு‌‌வி‌க்க கோ‌ரி ராமே‌ஸ்வர‌த்த‌ி‌ல் நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம்

22-jayalalitha.jpgஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு‌ள்ள 21 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க சார்பில் நாளை 25ஆ‌ம் தே‌தி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறு‌கிறது. இது தொட‌ர்பாக அ‌க்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி கடந்த மாதம் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து மீண்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித் தொழிலை செய்ய ஆரம்பித்தனர்.

ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். 16.9.2009 அன்று ராமேஸ்வரம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து, வலைகளை அறுத்து, அவர்களுடைய படகுகளை சேதப்படுத்தி மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி எறிந்ததோடு மட்டுமல்லாமல் 5 படகுகளையும், 21 மீனவர்களையும் கடத்திச் சென்று உள்ளனர்.

தமிழக மீனவர்களை ஈவு இரக்கமின்றி துன்புறுத்துவது, துப்பாக்கியால் சுடுவது, சிறை பிடிப்பது ஆகியவற்றை இலங்கை அரசு வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறது. இது போன்ற துயரச் சம்பவம் நடைபெறும் ஒவ்வொரு முறையும் இலங்கை அரசைக் கண்டித்து அறிக்கை விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கருணாநிதி.

தமிழக மீனவர்களை வாழவிடாமல் தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டு இருக்கும் இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க மத்திய அரசு மூலமாக தி.மு.க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி மாலை 3 மணி அளவில் ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலர் டி.ஜெயக்குமார் தலைமையிலும், மீனவர் பிரிவு செயலர் கே.கே.கலைமணி, ராமநாதபுரம் மாவட்ட செயலர் வ.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *