இலங்கையின் வடக்கே வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு மீள் குடியேற்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சில குடும்பங்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயம் இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாமிலுள்ள 42 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
இவர்களைப் பிரதேச செயலக அதிகாரிகள் பொறுப்பேற்று உறவினர்களிடம் நேரடியாக ஒப்படைத்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.அதிகாரிகளின் தகவல்களின்படி கட்டம் கட்டமாக இக்குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது