விவசாயிகள் தொடர்பான புதிய வரை விலக்கணத்தை உள்ளடக்கியதும், நெற் செய்கையில் ஈடுபட்டு வரும் குத்தகைக்கார விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் விதத்திலான கமநலச் சேவைகள் சட்டமூலமொன்று விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சுக்கு அறுபத்து எட்டு கோடியே 53 லட்சம் 93, 938 ரூபாவை பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்புப் பிரேரணை யொன்றை சமர்ப்பித்து பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாயிகளின் சிறப்புரிமைகளை, பாதுகாக்கவும், அவர்களுக்கு உரித்துடையவற்றை பாதுகாக்கவும் புதிய கமநல சேவைகள் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு சட்டவாக்கம் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் விரைவில் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படும். இவ்வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படும்.
விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக எமது அரசு தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் தொடர்பாக கொண்டுவரப்படும் இச்சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமையாகும். இக்கடமையிலிருந்து விடுபடவும் கூடாது.
வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும். அந்த அளவுக்கு விவசாயத்துறை ஊக்குவிக்கப்பட்டு தன்னிறைவும் காணப்படும். 1976ஆம் ஆண்டிலிருந்து கடந்த காலங்களில் கமநல சேவைகள் திணைக்களத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினால் ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யும் வகையில் குறை நிரப்பு தொகை கமநல சேவைகள் அமைச்சுக்கு கோரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.