இந்தியா வின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் 178 மீட்டர் உயரமான ராட்சத புகைபோக்கியொன்று சரிந்து விழுந்ததில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
கோர்பா மாவட்டத்தில் பாரத் அலுமினியம் நிறுவனத்துக்காக மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அங்கு திடீரென்று அந்த புகைபோக்கி சரிந்து விழுந்ததில் மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரத் அலுமினியம் நிறுவனத்துக்காக, சீன நிறுவனம் ஒன்று மின் நிலையம் அமைக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் இன்னொரு தனியார் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தது. அந்தத் தனியார் நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று கூறி, அந்த நிறுவன அதிகாரி ஒருவரை ஊழியர்கள் சிலர் அடித்துக் கொன்றுவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது