ஏ-9 வீதியினூடாக 10 இலட்சம் இலவசப் பாட நூல்கள் யாழ்ப்பாண குடாநாட்டிற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பான வைபவம் பத்தர முல்லையில் உள்ள கல்வி அமைச்சில் நேற்று நடந்தது.
கடந்த காலங்களில் கப்பல் மூலம் கடல் மார்க்கமாக புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இம்முறை ஏ-9 வீதியினூடாக தரைமார்க்கமாக 108 மில்லியன் செலவில் 14 லொறிகளில் 10 இலட்சம் புத்தகங்கள் யாழ்ப்பாணம் மேலதிக கல்விப் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடல்மார்க்கமாக 3 மில்லியன் செலவிலேயே புத்தக விநியோகம் இடம்பெற்றது. ஆனால், இம்முறை தரைமார்க்கமாக 1.3 மில்லியன் செலவிலேயே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
யாழ்ப்பாணத்துக்கு மொத்தமாக 12 இலட்சம் புத்தகங்கள் தேவைப்படும் நிலையில் மிகுதி இரண்டு இலட்சம் புத்தகங்கள் எதிர்வரும் வாரங்களில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கு தேவையான 30 மில்லியன் புத்தகங்களில் இதுவரை 12 மில்லியன் புத்தகங்கள் மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 18 மில்லியன் புத்தகங்கள் 30.11.2009 இற்குள் விநியோகிக்கப்படுமென பிரதியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு உள்ளிட்ட முழு இலங்கையிலுமுள்ள 42 இலட்சம் மாணவ மாணவிகளுக்கான 2010 ஆம் ஆண்டுக்குரிய இலவச பாடநூல்களை ஒரே நாளில், அதாவது டிசம்பர் 07 ஆம் திகதி வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரதி அமைச்சர்சச்சி தானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- இவ்வாண்டுக்கான புத்தகங்கள் மீள் பதிப்பு செய்யு முன்னர், பாடநிபுணத்துவ மிக்க ஆசிரியர் குழுவினால் தேவையான திருத்தங்கள் கவனமாக செய்யப்பட்டுள்ளன. புதிய வடிவமைப்புடனும் திருத்தங்களுடனும் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை மாணவர்களுக்கு தேவையான 306 வகையிலான 30 மில்லியன் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன் இப்புத்தகங்களுக்கான மொத்த செலவு சுமார் 3000 மில்லியன் ஆகும்.
03.09.2009 தொடங்கப்பட்ட விநியோக நடவடிக்கைகள் 3011.2009 வரை ஏறக்குறைய மூன்று மாத காலப் பகுதிக்கு இடம்பெறும். இவ்வாறு அனுப்பப்படும் புத்தகங்கள் நாடு முழுவதிலுமுள்ள மத்திய நிலையங்களூடாக விநியோகிக்கப்படும்.
தேசிய பாடசாலைகள் மற்றும் மாணவர் தொகை இரண்டாயிரத்துக்கு மேல் காணப்படும் பாடசாலைகளுக்கு நேரடியாக கல்வி அமைச்சினால் நூல்கள் விநியோகிக்கப்படவுள்ளன.