பழம்பெரும் நடிகை எஸ் வரலட்சுமி காலமானார்.

230909varalakshmi.jpgபழம் பெரும் நடிகை எஸ். வரலட்சுமி சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 84. கடந்த ஆறுமாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த அவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இரவு 8.20 மணிக்கு காலமானார்.

1938-ம் ஆண்டு முன்னோடி இயக்குநர் கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த “சேவாசதனம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எஸ். வரலட்சுமி. இவர் மிகச் சிறந்த பாடகியும் கூட.  சக்கரவர்த்தி திருமகள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், கந்தன் கருணை, நீதிக்குத் தலைவணங்கு, பூவா தலையா, குணா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தவர் எஸ் வரலட்சுமி.

இவர் பாடிய ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்….’ என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது, கேட்போரை உருகவைப்பது.

கலைமாமணி, கலைவித்தகர், கண்ணதாசன் விருது  உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த எஸ். வரலட்சுமிக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர். இறுதிச் சடங்கு புதன்கிழமை (நேற்று) மாலை நடைபெற்றது. .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அருமையானதொரு குணசித்திர நடிகை. கணீரெல்ல குரலில் இவர் பாடிய அனைத்துப் பாடல்களும் என்றும் நிலைத்து நிற்கும். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும், உற்றார் உறவினர் ஆறுதல் கொள்ளவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

    Reply