இலங் கையின் பொருளாதார நிலை எதிர்பார்ததைவிட நல்ல நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி பாராட்டுத் தெரிவித்துள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில். இலங்கைக்கான வெளிநாட்டு நிதி ஒதுக்கீடு 1.9 பில்லியன் டொலர் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு விடயத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தாம் விரும்பியவாறு கருத்துத் தெரிவிப்பது அவருக்கு பழக்கமாகியுள்ளது.
எமது மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி நாட்டின் வெளிநாட்டு நிதி ஒதுக்கீடு 4 பில்லியன் டொலராகும். இதனை சரியாக அறிந்துகொள்ளாமல் 1.9 பில்லியன் என அவர் நினைத்தவாறு கூறியிருக்கும் கருத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாட்டின் பொருளாதாரம் அந்த அளவுக்கு வீழ்ச்சி அடையவில்லை. சர்வதேச அமைப்புக்கள் கூட எமது பொருளாதார நிலை குறித்து திருப்தி தெரிவித்துள்ளன.
சர்வதேச நாணய நிதியம் எமக்கு கடனுதவி வழங்கும் போது அவர்கள் எதிர்பார்ததைவிட நாட்டின் பொருளாதாரம் சிறந்த நிலையில் காணப்படுவதாக அந்த நிதியத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். நாட்டின் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. பொரளாதாரம் அபிவிருத்தி கண்டுள்ளது. தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளன. இவ்வாறு பல துறைகளிலும் நாட்டில் முன்னேற்றம் காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.