யாழ். குருநகர் – கொழும்புத்துறை வீதி போக்குவரத்துக்கு திறப்பு

epdp.jpgயாழ்.  குருநகர் – கொழும்புத்துறை கடற்கரை வீதி மக்களின் போக்குவரத்துக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் திறந்து வைத்தார். இதுதொடர்பான நிகழ்வில் உரையாற்றிய அவர் கூறியதாவது :-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இன்றைய தினம் படைத் தரப்பினரதும், அரச உயர் அதிகாரிகளினதும் ஒத்துழைப்புடன் இந்த வீதியை மக்களின் போக்குவரத்திற்காகத் திறந்து வைப்பதில் தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்ததுடன், மக்களின் சார்பில் ஜனாதிபதிக்கும் படைத் தரப்பினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே கடற்றொழிலாளர்களுக்குத் தொழிலில் ஈடுபடுவதற்கு 24 மணி நேர அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் இவ்வாறானதொரு சூழ் நிலையை, ஏற்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினரும் எமது மக்களும் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 30 வருடங்களாக எங்களை நாங்களே அழித்துக்கொண்ட நிலையை முழுமையாக மாற்ற வேண்டும் எனில், நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் அத்தகையதொரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், நாம் இழந்த அனைத்தையும் ஒரு சில வருடங்களில் மீளவும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஆசியுரை வழங்கிய வணக்கத்திற்குரிய ஜெரோ செல்வநாயகம் இன்று வீதியைத் திறந்து வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மக்களின் வாழ்வையும் மலர வைப்பார் என்பதால், அமைச்சருக்குத் தனது நன்றிகளையும் ஆசிகளையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த வைபவத்தில் யாழ். கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், படை அதிகாரிகள், பிரதேச செயலாளர், மாநகர முதல்வர், உதவி முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *