தாய்நாட் டுக்கும் நாட்டு மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுப்பதற்காக கைகள் விலங்குகளை ஏற்க நேர்ந்தால் அதனை தாய்நாட்டின் சார்பில் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பணத்துக்காகவும் அரசியல் இலாபங்களுக் காகவும் தாய்நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண் டாமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
ஹக்மன நகரில் 554 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்கள்மயப்படுத்தும் நிகழ்வும், மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்ளை ஆதரிக்கும் மக்கள் பேரணிக் கூட்டமும் நேற்று ஹக்மன நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-
30 வருட காலமாக எமது நாட்டைப் பீடித்திருந்த பயங்கரவாதத்தை எம்மால் முடிவுக்குக் கொண்டுவர முடிந்துள்ளது. பயங்கரவாதம் எமது முக்கிய தலைவர்களை மட்டுமன்றி நாட்டின் அறிஞர்கள், கல்விமான்கள் மற்றும் அப்பாவிப் பொதுமக்களையும் படுகொலை செய்தமையைக் குறிப்பிட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் எமது படையினர் 20,000 பேர் பலியானதுடன், பல்லாயிரக்கணக்கானோர் ஊனமுற்றுள்ளனர்.
நாட்டில் மூன்றில் ஒரு பகுதி உத்தியோகபூர்வமாக எழுதிக் கொடுக்கப்பட்டதுடன், அவ்வொப்பந்தம் மூலம் எமது முக்கிய அமைச்சர்களும் புலனாய்வுப் பிரிவினரும் படுகொலை செய்யப்பட்டனர். எமது ஆட்சிக் காலத்திலும் முக்கியமான சிரேஷ்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, த. மு. தசநாயக்க போன்றோர் கொல்லப்பட்டனர். நாட்டைத் துண்டாட நினைத்த பயங்கரவாதம் ஒழிக்க ப்பட்டுவிட்டது. இதனால் பாதிக்கப்பட்டு எம்மிடம் தஞ்ச மடைந்த மூன்று இலட்சம் மக்களுக்கும் இருப்பிடம், உணவு என சகல வசதிகளையும் நாம் பெற்றுக்கொடுத்து வருகிறோம்.
இவர்களுள் பிரபாகரனின் பெற்றோர், தமிழ்ச்செல்வனின் மனைவி, குடும்பத்தினரும் இருந்தனர். அத்துடன் பல புலி உறுப்பினர்களும் இருந்தனர். எனினும் எமது படையினர் அவர்களைக் கொன்றுவிடவில்லை. மாறாக பாதுகாத்தனர். மகன் செய்த தவறுக்காக தகப்பனைப் பழிவாங்க படையினர் முயலவில்லை.
ஊவா மாகாண தேர்தலில் வெற்றிபெற்று நான்கு மாதமே முடிவுற்ற நிலையில் தாய்நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகளில் சில சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. தாய்நாட்டுக்கு எதிராகவும் தாய் நாட்டைப் பாதுகாத்த படையினருக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சர்வதேசத்தின் முன்னிலையில் எம் தாய்நாட்டின் கீர்த்தியை களங்கப்படுத்த இச்சக்திகள் முயல்கின்றன. எமது படையினரை இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்த சாட்சியங்களைத் தேடுவதில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சில பத்திரிகைகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அரசியலில் வங்குரோத்தடைந்த தலைவர்கள் இதற்கான அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
அரசுக்கு எதிர்க்கட்சியே தவிர நாட்டுக்கு எதிரான கட்சியாக இருந்து தாய் நாட்டுக்குத் துரோகம் செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது. இத்தகையோரிடம் பணத்திற்கும் அரசியல் இலாபத்திற்கும் தாய்நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். நாட்டு மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்துள்ள போதிலும் ஜனாதிபதியாகிய எனக்கும், படைத் தளபதிகள், பாதுகாப்புச் செயலாளர் உட்பட உயர் படை அதிகாரிகளுக்கும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை சகலரும் உணர வேண்டும். தாய்நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்தியமைக்கான பிரதி பலனாக நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றோம்.
யுத்தம் முடிந்து விட்டது. இனி யுத்தத்தைக் காரணம் காட்டி அபிவிருத்திகளை முன்னெடுக்காமல் இருக்க முடியாது. சர்வதேச நாணய நிதியத்தில் நாம் கடன் பெற்றுள்ளோம். இது புதிதான ஒன்றல்ல. நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன. துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என பல்வேறு பாரிய திட்டங்கள் நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகின்றன.
சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் பரிசீலிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில பத்திரிகைகள் சமூகத்தை சீர்குலைப்பதிலும் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதிலும் செயற்படுகின்றன.
நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையென எவரும் கூற முடியாது. மற்றெல்லா மாகாணங்களையும் விட தென் மாகாண மக்களுக்கு பெரும் பங்குள்ளது. இந்நாட்டை ஒரே கொடியின் கீழ் கொண்டுவருவதும், உங்கள் பிள்ளைகளை எதிர்காலத் தலைவர்களாக உருவாக்குவதும் எமது நோக்கம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
தெற்கில் அமைதியான தேர்தல் நடைபெற வேண்டும். அதற்குச் சகலரதும் பங்களிப்பு அவசியம். வெற்றிலைக்கு வாக்களிப்பதுடன், உங்கள் மூன்று விருப்பு வாக்குகளையும் தவறாது நீங்கள் அளிப்பது அவசியம். தாய்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு உங்களது பூரண ஆதரவை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.