உலக மட்டத்தில் அணு ஆயுதப் பரவலை தடுக்கவும், ஆயுதக் களைவின் மூலம் அணுசக்தி சார்ந்த தீவிரவாதத்தை குறைக்கும் முகமான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அணு ஆயுதமற்ற ஒரு உலகை உருவாக்க அனைவரிடமும் இருக்கும் ஒரு அர்ப்பணிப்பு இந்தத் தீர்மானத்தின் மூலம் தெரிகிறது என்று இந்தக் கூட்டத்துக்கு தலைமையேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கும் ஒரு லட்சியத்தை நோக்கிய பயணத்தில் அனைவருக்கும் ஒரு பங்கிருப்பதை சுட்டிக்காட்டிய ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ், தம் நாட்டிடம் இருக்கும் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை மூன்றில் இரண்டு பங்குக்கும் கூடுதலாகக் குறைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இரானின் அணுத்திட்டம் தொடர்பாக அதன் மீது கூடுதல் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்தக் கூட்டம் பார்க்கப்படுகிறது. என்றாலும் இரான் மீது கூடுதலாக எந்த தடையையும் விதிப்பதற்கு சீனா தனது எதிர்ப்பை மீண்டும் தெரிவித்துள்ளது.