1920 களில் துருக்கிய குடியரசு உருவாகியிருக்காவிட்டால் அங்கே ஒட்டோமான் பேரரசின் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்திருக்கக்கூடிய நபர், தற்போது தனது தொண்ணூற்று ஏழாவது வயதில் உயிரிழந்துள்ளார்.
துருக்கியிலே கடைசி ஒட்டோமான் என்று அறியப்படுகின்ற எர்துகுருல் உஸ்மான், ஒட்டோமான் பேரரச குடும்பத்தில் பிறந்து, போஸ்போரஸ்ரில் உள்ள சுல்தான் அரண்மனையில் சிறு பிள்ளையாக விளையாடியிருந்தவர்.
ஆனால் இவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை நியூயார்க்கில் உள்ள ஒரு சாதாரண அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே கழித்திருந்தார். நவீன துருக்கியின் தோற்றுநரான கெமால் அடாதுருக்கினால் ஒட்டோமான் ராஜ குடும்பம் நாட்டை விட்டு துரத்தப்பட்டிருந்தது. அப்போது நாட்டை விட்டு வெளியேறியிருந்த உஸ்மான் 1990 களில் தனது தாத்தாவின் முந்தைய அரண்மனையை பார்க்க வந்த ஒரு சுற்றுலாக் குழுவோடு சேர்ந்துதான் மீண்டும் துருக்கிக்குள் நுழைந்திருந்தார்.