உச்சநீதி மன்றத்திற்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியின் நிபந்தனைகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் திறைசேரி செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர சமர்ப்பித்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதேநேரம், கலாநிதி ஜயசுந்தர திறை சேரி செயலாளர் பொறுப்பை மீண்டும் ஏற்க முடியுமெனவும் உச்ச நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு வழங்கியது.
இவரது விண்ணப்பம் தொடர்பாக ஆராய்ந்த ஏழு பேர் கொண்ட விசேட நீதியரசர்கள் குழுமத்தில் ஆறு நீதியரசர்கள் விண்ணப்பத்திற்கு சார்பாகவும் ஒருவர் மாறுபட்ட கருத்தையும் வழங்கியிருந்தார்.
ஆறுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதம நீதியரசர் அசோக டி சில்வா உட்பட ஆறு நீதியரசர்கள் விண்ணப்பத்தி ற்கு சார்பாகத் தீர்ப்பு வழங்கினர். நீதியரசர் சிரானி திலகவர்த்தன மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். முழுமையான தீர்ப்பு வழங் குவதை நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்தில் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா, நீதியர சர்களான சிராணி பண்டாரநாயக்க, சிராணி திலகவர்தன, சலீம் மர்சூஃப், ஜகத் பாலபட்டபெந்தி, கே. சிறிபவன், பி. ஏ. ரத்நாயக்க ஆகியோர் அடங்கியிருந்தனர்.
பீ. பி. ஜயசுந்தரவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜரானார். நீதிமன்றத்தினால் வழங் கப்பட்ட தீர்ப்பை மீளாய்வு செய்யுமாறு பிரதிவாதியான பீ. பி. ஜயசுந்தர ஒருபோதும் கோரவில்லை. நீதிமன்றத்திற்கு அவரால் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியை வாபஸ் பெறுமாறே மனுதாரர் கோருகிறாரென பாயிஸ் முஸ்தபா நீதிமன்றுக்குத் தெளிவுபடுத்தினார்.
மனுதாரரான ஜயசுந்தர சுயவிருப்பத்தின் பேரில் நீதிமன்றுக்கு சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்கவில்லை. மாறாக முன்னாள் பிரதம நீதியரசரின் உத்தரவின் பேரிலேயே அதனை அவர் சமர்ப்பித்தாரென பாயிஸ் முஸ்தபா எடுத்துக் கூறினார். முன்னாள் பிரதம நீதியரசர் 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி அந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
லங்கா மரைன் சேர்விஸ் லிமிட்டெட் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தியது தொடர்பான தீர்ப்பின் போது இனி மேல் எந்தவித அரச பதவிகளும் வகிப்பதில்லையென சத்தியக் கடதாசியை நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்குமாறு முன்னாள் நீதியரசர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியின் நிபந்தனைகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கலாநிதி ஜயசுந்தர உச்ச நீதிமன்றத்திற்கு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.