ஹெச். ஐ.வி. தொற்று அல்லது எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு 18 மாத கால ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போன்றதொரு திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான் என்று அரசு ஆணை கூறுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அரசு ஊழியர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு ஏற்கனவே இது போன்று விடுப்பு கொடுக்கப்படுவதாகவும் தமிழக அரசின் சுகாதாரச் செயலர் சுப்புராஜ் BBCதமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தமிழக அரசு ஊழியர்களில் எத்தனை பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற விபரம் அரசிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.