மக்கள் மத்தியில் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் கிழக்கின் முழக்கம் – 2009 மாபெரும் விழா இன்று காலை முதலில் நள்ளிரவு வரை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெறுகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இவ்விழா நடைபெறுகிறது. மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகள் பங்குகொள்ளவுள்ள இவ்விழாவில் நீச்சல் போட்டி, ஓட்டப் போட்டிகள், உதைபந்தாட்டம், பீச்போல் மற்றும் தோணி ஓட்டம், அலங்காரப் போட்டி, மெஜிக் காட்சி மற்றும் கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுவோருக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
இறுதி நிகழ்வாக இசைக் கச்சேரியும், வாண வேடிக்கைகளும் நடைபெறவுள்ளன. தமிழ், சிங்கள, முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் இன, மத, பேறுபாடுகள் இன்றி ஒரே இடத்தில் சங்கமிக்கும் இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் நிலவிய போர்ச் சூழல்கள் காரணமாக இனங்களுக்கிடையேயான உறவுகளில் விரிசல், மக்கள் மத்தியில் ஒருவித அவநம்பிக்கை, பயம், உயிர்வாழ்வது பற்றிய எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் இருந்த நிலை இப்போது மாறியுள்ளது.
இந்நிலையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன் அச்சமின்றி வாழ்வதற்கானதொரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண அமைச்சு கிழக்கு முழக்கம் – 2009 விழாவை நடத்துகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்ந்து இவ்விழாவை நடத்த கிழக்கு மாகாண சபை திட்டமிட்டுள்ளது. கிழக்கு மக்களின் வாழ்க்கை முறையை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழி அம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதாகுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்விழாவிற்கான ஊடக அனுசரணையை ஸ்ரீ டி.வி. வழங்குகிறது. இத்தாலி ரோம் நகரை மையமாகக் கொண்டு 152 நாடுகளில் ஒலிபரப்புச் சேவைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.