இலங் கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் வகையில், இந்தப் பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. அதே நேரத்தில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக இலங்கை அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது.
டெல்லி தமிழ் மாணவர் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கூட்டத்துக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், பத்திரிகையாளர் எம். நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க உலக நாடுகள் முன்வரவில்லை என்று குற்றம் சாட்டினார் பழ. நெடுமாறன்.
இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. இந்திய அரசு இலங்கைக்கு மறைமுகமாக ஆயுத உதவிகளைச் செய்ததாகவும் இலங்கையின் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் ஐ.நா.வின் முயற்சியை முறியடித்ததும் இந்தியாதான் என்று வைகோ குற்றம்சாட்டினார்.