இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அரபு நாடுகள் பலஸ்தீனைத் தூண்ட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா கேட்டுள்ளார். ஐ. நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹ¥வை ஒபாமா சந்தித்தார்.
இதன் போது மேற்குக் கரையில் யூத குடியேற்றங்கள் நிறுவும் வேலைகளை உடன் நிறுத்துவது பற்றியும் பேசினார். அரபு நாடுகளின் சமாதான அக்கறையைப் பொறுத்தே மேற்குக்கரை யூத குடியேற்ற விவகாரம் தங்கியுள்ளதாக பென்ஜிமின் நெதன்யாஹ¥ கூறினார்.
இதையடுத்து பலஸ்தீன ஜனாதிபதி அப்பாசையும் அமெரிக்க ஜனாதிபதி சந்தித்துள்ளார். அறுபது வருடகால மத்திய கிழக்கு முரண்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. புதிய தீர்வு யோசனைகளுக்காக நாங்கள் காத்திருக்கப் போவதில்லை. பேச்சுக்கள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன.
எனவே அரபு நாடுகள் பலஸ்தீனை சமாதானத்தின் பக்கம் நகர்த்த வேண்டும் இவ்வாறு பராக் ஒபாமா தெரிவித்தார். ஐ. நா. உரையின் போதும் உலகத் தலைவர்கள் மத்திய கிழக்கு முரண்பாடுகள் பற்றி விசேட உரைகளை ஆற்றினார். அரபு நாடுகளின் தலைவர்களை ஹிலாரி கிளிங்டன் சந்தித்தார்.