இஸ்ரேலியப் படைகளுக்கும், பலஸ்தீனர்களுக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பில் நான்கு பலஸ்தீனர்கள் காயமடைந்ததுடன் இரண்டு இஸ்ரேல் இராணுவ வீரர்களும் காயத்துக்குள்ளாகினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு ஜெரூஸத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலடியில் இச் சம்பவம் இடம் பெற்றது.
முஸ்லிம்களின் புனிதத் தலங்களுள் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேலியர்களைத் தடுத்து நிறுத்த பலஸ்தீனர்கள் முயன்றபோதே இச் சம்பவம் ஏற்பட்டது.
இக் கலகத்தை அடக்க மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கி மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இறப்பர் குண்டுகளால் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம் கைக்குண்டுகளையும் வீசியது.
இஸ்ரேல் குடியேற்றங்களை நிறுவும் பொருட்டு கிழக்கு ஜெரூஸலத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டட வேலைகளைத் தடுத்து நிறுத்தவே பலஸ்தீனர்கள் திரண்டு வந்தனர். நான்கு பலஸ்தீனர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். நிலைமைகள் சீரடையும் வரை இப்பகுதியை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது.