கிழக்கு மாகாணத்தில் சுனாமி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 48,000 விதவைகளுக்கு நல்வாழ்வளிக்க இந்திய சேவா நிறுவனம் முன்வந்துள்ளதாக இலங்கையின் கிழக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் மேற்கொண்ட சந்திப்பினைத் தொடர்ந்து மூவர் கொண்ட குழுவினர் கிழக்கு மாகாணத்துக்கு வந்து இது குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தியா, சார்க் பெண்கள் அபிவிருத்தி நிதியம் மூலம் 100 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இந்தியாவுக்கு வெளியே இந்த நிதி செலவிடப்படும் நிலையில் கிழக்கு மாகாணமும் இதற்கான கணிசமான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.