ஓக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டுதோறும் ஒக்டோபர் 1 ஆம் திகதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு 45/106 தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முதன் முதலாக 1991 ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டுகளும் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும். ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இத்தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கௌரவம் செலுத்தும் தினமாகவும் இது அனுட்டிக்கப்படுகின்றது.
இவ்விடத்தில் முதுமை என்றால் என்ன என்பதைப் பற்றி சிந்தித்தல் வேண்டும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப்பட்டாலும்கூட, முதுமை என்பது ஒரு நபரின் பிறப்பிலிருந்து தொடங்குகின்றது என்பர். ஒரு குழந்தையானது வளர்ந்து பெரிதாகும் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதுமை நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. முதுமையும் இறப்பும் மனிதன் சந்திக்கும் தவிர்க்கமுடியா நிலையாகும்.
முதுமையின் போது ஏற்படும் நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் எடுத்து நோக்குமிடத்து மூளை மற்றும் நரம்புமண்டல அமைப்பு
முதுமையடையும் போது, மூளையின் நரம்புமண்டல அணுக்களின் எண்ணிக்கையானது குறையவடையத் தொடங்குகின்றது. இழையச் சீர்கேடு, தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு முறைகளில் உடலியல் தொழிற்பாடு பாதிக்கப்படுவதனால் வயதானவர்களின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்து காணப்படுகின்றது. ஞாபகசக்தி குறைவு, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் குறைவான வேகத்துடனேயே காணப்படுவர்.
60 வயதிற்கு மேல் முதுகு தண்டில் உள்ள அணுக்கள் குறைய ஆரம்பிப்பதால் அவர்களின் உணர்வு சக்தி குறையத் தொடங்குகின்றது. முதுமையடையும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது மெதுவாக குறைய ஆரம்பிக்கின்றது, இது பல நோய்த்தொற்றுகளுக்கு, குறிப்பாக இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை பெரிதும் முதுமைப்படுதலின் காரணமாகவே ஏற்படுகிறது.
வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். சத்துணவு, நலவாழ்வு, மருத்துவம் ஆகிவற்றிலேயே வாழ்நாள் எதிர்பார்ப்பு பெரும்பாலும் தங்கி இருக்கிறது. சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டும் காரணிகளை ஏதுவாக்கத் தேவை. இத்தகைய சூழலைப் பொறுத்து ஒரு மனிதனுக்கு சராசரி ஆயுட்காலம் 81 வருடங்களாக கணிப்பிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு நாடு இந்த கணிப்பீடு வேறுபடலாம். பதியப்பட்ட மனித வரலாற்றில் யாரும் 123 வயதுக்கு மேல் இருந்ததாக ஆதாரம் இல்லை. மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களே 100 வயதுக்கு மேலே வாழக்கூடியதாக இருக்கின்றது. மனிதனின் சராசரி வாழ்நாள் கூடி வந்திருப்பினும், மிக கூடிய வாழ்நாளின் அளவு கூடவில்லை. இதற்கு உயிரியல் அடிப்படையிலான எல்லைகள் இருக்கலாம். இருப்பினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இந்த எல்லை நீடிக்கப்படக்கூடியதே.
முதுமை தொடர்பாக பல கோட்பாடுகள் காணப்படுகின்றன. மனிதரின் படிவளர்ச்சியை பேணவே மனிதர் முதுமை பெற்று இறக்கின்றனர் என்பதே படிவளர்ச்சிக் கோட்பாட்டின் (Evolutionary Theory) சாரம். காலம் செல்ல செல்ல ஒரு உயிரினத்துக்கு இயற்கையால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல் கூடுகின்றது. எடுத்துக்காட்டாக உயிரினம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு கூடுகின்றது. உயிர் உற்பத்தித் திறன் இளவயதிலேயே வீரியமாக இருக்கிறது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல உடல் வலு இழந்து போகின்றது.
மேலும், யாரும் இறக்காவிட்டால், உயிரினங்களின் தொகைகூடி பெரும் அழிவுக்கு இட்டுச் செல்லலாம். மாறிவரும் சூழலுக்கு முதிய உயிரினங்கள் தாக்குப்பிடிப்பது கடினமாக இருக்கும். முதிய உயிரினங்களே இருந்தால் அவற்றின் குடிவழிகளே மக்கள் தொகையில் கூடுதலாக இருக்கும். இது இனப் பெருக்கத்துக்கும் படிவளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.
மரபணு முதுமைக் கோட்பாட்டின்படி (The Genetic Theory of Aging)
மரபணுக்களாலேயே வாழ்நாள் பெரிதும் முடிவாவதாக மரபணுக் கோட்பாடு கூறுகிறது. அதாவது, பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் மரபணுக்களைக் கொண்டு வாழ்நாள் முடிவாகிறது என்பது அடிப்படையாகும்.பெற்றோர்கள் நீண்ட வாழ்நாளைக் கொண்டால் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழ்வதை அவதானிக்க முடியும். மேலும் இரட்டை மனிதர்களின் வாழ்நாள் உடன் பிறந்தவர்களை விட ஒரே கால அளவைக் கொண்டதாக இருக்கும். இவை மரபணுக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களாக கொள்ளப்படுகின்றன. இதைப் போன்று மேலும் பல கோட்பாடுகள் காணப்படுகின்றன.
ஐ.நா.வின் கணிப்பீட்டின்படி தற்போது உலகில் ஒவ்வொரு பத்துப் பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் அறுபது அதற்கு மேற்பட்ட வயதை உடையவர்கள் காணப்படுகின்றனர். இது 2050ஆம் ஆண்டில் 5க்கு ஒன்று என்றடிப்படையிலும் 2150 இல் 3க்கு ஒன்று என்றடிப்படையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோக்குமிடத்து தற்போது உலகலாவிய ரீதியாக 60 கோடி முதியவர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 2050ம் ஆண்டளவில் 200 கோடியாக அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. கடந்த காலங்களில் உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது இதற்கு அடிப்படை காரணமாகக் கூறப்படுகின்றது. குழந்தை பிறப்பு வீதம் அதிகம் அதே போல் இறப்பு வீதம் அதிகம் என்ற நிலை மாறி தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் முதியோரின் சுதந்திரம், அவர்களின் பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை விசேடமாக கவனத்தில் கொள்ளப்படுகின்றன. உலக முதியோர் தினத்தில் இத்திட்டங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டுமெனவும் மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார, அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டுமெனவும் எதிர்பார்;க்கப்படுகின்றன.
முதியோர் தினத்தை உலகமே அனுஸ்டிக்கின்ற இச்சூழ்நிலையில் எமது முதிய பெற்றோர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் நாம் உள்ளோம். எம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் தமது வாழ்நாளில் பல்வேறுபட்ட தியாகங்களைப் புரிந்து எம்மை இந்நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். நவீன உலகமயமாக்கல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே எமது வாழ்க்கைத்திட்டத்தை ஒழுங்குபடுத்தி கொண்டு வருவதனால்; எமது பெற்றோரை பராமரிக்க எமக்கு கால அவகசாம் கிடைப்பதில்லை. அண்மைக்கால ஆய்வுகளின்படி கடந்த ஒரு தசாப்தத்துக்கு இடைப்பட்ட காலத்தில் முதியோர் இல்லங்களில் தமது பெற்றோரை சேர்த்துவிடும் நிலை அதிகரித்து வருவதாக புள்ளி விபரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த நிலையை நாம் ஆத்மார்த்த வாக்குமூலங்களாக இதயங்களில் பதிவாக்கி சிந்திக்க வேண்டும்.
நாம் பெற்றோர் ஆகும் வரை நமது பெற்றோரின் அருமை தெரியாது என்ற முன்னோர் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமாகவே இன்றைய காலகட்டத்தில் பெற்றோராக இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி எண்ணி நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். பெற்றோருக்கு மதிப்பு தரவேண்டுமென்பது நம் எல்லோருடைய கலாசாரத்திலும் ஊறிப்போன விஷயம் என்றாலும், தற்போதுள்ள சூழலில் பெற்றோருக்குரிய மதிப்புகள் குறைந்து கொண்டே வருகிறதென்பது வருத்தமளிக்கும் விஷயமாகவே உள்ளது
இயந்திரமான வாழ்க்கை, மேலைநாடுகளின் கலாசார தாக்கம் போன்றவற்றின் காரணமாக பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நேரங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இதனால்தான் தற்போதெல்லாம் பிஞ்சு குழந்தைகளை மணிக்கணக்கில் பாதுகாக்க குழந்தைப் பராமரிப்பு இல்லங்களையும், ஆயாக்களையும் தேடிப்பிடிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது.
இன்று குழந்தைகளாக இருப்பவர்கள் பிற்காலத்தில் பெற்றோராக மாறும் போது தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதென்பது என்னவோ தற்போது பேஷனாகி விட்டது. பணம் கட்டி விட்டால் போதும் முதியோர் இல்லங்களில் பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பும் இன்றைய பிள்ளைகள், முதியோர் இல்லங்களில் தங்கள் பெற்றோர் படும் துன்ப துயரங்களை எண்ணுவதில்லை.
வளரும் வரைதான் பெற்றோர்… சொந்தக்காலில் நின்று விட்டால் யாரும் தேவையில்லை என்ற கண்ணோட்டம் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மனதில் ஆழமாகவே வேரூன்றியிருக்கிறது. ஆனால், தாமும் ஒரு காலத்தில் முதியவர்களாவோம் என்ற எண்ணத்தை மறந்துவிடுகின்றார்கள்.
இலங்கையைப்பொறுத்தவரை உலகளாவிய ரீதியில் ஒப்புநோக்கும்போது கூடிய முதியோர்களைக்கொண்ட நாடு என்ற பெருமை உள்ளது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் அண்ணளவாக 22 இலட்சம் மூத்த பிரஜைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இக்கணிப்பீட்டின்படி இத்தொகை 2011 ஆம் ஆண்டளவில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகை 27 இலட்சமாகவும், 2031 ஆம் ஆண்டில் 50 இலட்சமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அப்போதைய மொத்த சனத்தொகையில் 13 வீதமாக இருக்கும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் முதியோர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இவாகள் பெரும்பாலும் தமது பிள்ளைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. ஒரு சிலர் தமது பிள்ளைகளாலேயே முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஏனையோர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். புள்ளி விபரங்களைப்பார்க்கும் போது இலங்கையில் 48.3 சதவீதமான முதியோர்கள் தமது பிள்ளைகளின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். ஓய்வூதியம் மூலம் 13.5 வீதத்தினரும் விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் மூலம் 10.3 வீதத்தினரும் தமது சொத்துகளின் வருமானம் மூலம் 7.7 வீதத்தினரும் வாழ்க்கையை நடத்துகின்றனர். இலங்கையில் உள்ள முதியோர்களில் 60-70 வயதுக்கிடைப்பட்டோர் 54.4 வீதமாக உள்ளனர்.70-80 வயதுக்கிடைப்பட்டோர் 32.3 வீதமும் 80-90 வயதுக்கிடைப்பட்டோர் 10 வீதமும் 90 வயதுக்கு மேற்பட்டோர் 1.3 வீதமுமாக உள்ளனர். இதே வேளை இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர்கள் தொடர்பில் அவர்களுக்குரிய பல செயற்றிட்டங்கள் முன்வைக்கப்படல் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காரணம் அதிகரித்து வரும் முதியோர்களை வைத்து பராமரிக்கும் அளவிற்கு இங்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் அவ்வில்லங்களுக்குரிய போதிய வருமானங்கள் நன்கொடைகள் கிடைப்பதில்லை என்ற காரணங்களாகும்.
இலங்கையில் உள்ள முதியோர்களில் 70 வீதமானோர் வறுமை கோட்டிற்கு கிழே வாழ்ந்து வருவதாகவும் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன, எனினும் இலங்கையில் மிக அதிகமான (34 வீதம்) வறுமை வீதத்தை கொண்டிருக்கக்கூடிய பெருந்தோட்டப்பகுதி முதயோர்களின் நிலை எப்படி இருக்கும் என்பது கூடியளவில் சிந்திக்க வேண்டிய விடயமே.
பெரியோர்களை மதி, கவனி என்று அறிவுரை வழங்கும் போது நம் பிற்காலத்தைக் கவனத்தில் கொண்டுதான் இப்படிக் கூறுகின்றோமோ என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. பிரபல்யம் மிக்க ஆங்கில மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் முதுமை எவ்வாறு உருவாகின்றது? அதனை வரவேற்பது எப்படி? என்பதை இவ்வாறு இயப்பினார். ஒருமனிதன் தன் வாழ் நாளில் பல பாத்திரங்களை ஏற்கிறான். முதலில் குழந்தை பிறகு மாணவன் பின்னர் விடலைப்பருவம், தொழில் வாய்ப்பை பெற்றபின் குடும்பஸ்தன் ஆகின்றான். காலச்சக்கரத்தின் அபரிமித சுழற்சியின் விளைவாக இறுதியில் மூக்கு கண்ணாடி அணிந்து முகம் சுருங்கி, உடல் மெலிந்து பல், கண்பார்வை எல்லாம் அற்ற நிலையில் கூன் விழுந்து முதுமையாகி மறைவது தான் சரித்திரம் என்றார்.
இன்றைய சமூக அமைப்பு பெரும்பாலும் கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து விலகி தன்னிச்சையாக இயங்கும் குடும்பங்களையே பெரிதும் சார்ந்துள்ளது. ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்பதற்கிணங்க ஒரு சில குடும்பங்களில் உள்ள ஒரு நபரோ அல்லது குடும்பமோ புலம் பெயர்ந்து சென்று அயல் நாடுகளில் அமர்ந்தார்கள் என்றால் இதனால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் முதுமையில் காலம் தள்ளி வரும் வயதான பெற்றோர்கள்தான் என்பது சொல்லித் தெரிவதற்கில்லை.
புலம் பெயர்தலால் அடையும் நன்மைகள் பலப்பல, அதே நேரத்தில் நாம் நமது பெற்றோர்களுக்கு கொடுக்கும் மன உளைச்சலுக்கும் நிம்மதியின்மைக்கும் அளவில்லை என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. உலகமயமாக்கலுடன் இணைந்த எமக்கு இது சற்று சிரமத்தைத் தந்தாலும்கூட, இவற்றை நடுநிலைமைப்படுத்திக் கொள்ளக்கூடிய அளவில் எம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ளாதவிடத்து முதியோராகப்போகும் எம் நிலையைப் பற்றி நாம் ஓரளவுக்கேனும் சிந்திக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் உள்ளோம்.
T Constantine
What is this special days all about???
Why dont you inform us in advance. I may consider buying new clothos to my children , let off crakers and celebrate.
kutuvi
சங்கரியும் வயோதிபம்> சம்பந்தரும் வயோதிபம்>
இருவரும் செய்வதென்ன?…… இவர்களையும் வரவேற்கலாமா?…..
பல்லி
//சங்கரியும் வயோதிபம்> சம்பந்தரும் வயோதிபம்>
இருவரும் செய்வதென்ன?…… //
இவை செயற்க்கை வயோதிபம்; கட்டுரை இயற்க்கை வயோதிபத்தை பற்றியே இருக்கு; சிலவேளை இவர்களும் தமது வீட்டில் வயோதிபர்களோ தெரியவில்லை;