மலையக சிறுவர், சிறுமியரை கொழும்புக்கு வீட்டுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லும் தரகர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திர சிகாமணி தெரிவித்தார்.
இவ்வாறான தரகர்களைக் கண்டறிவதற்கென குழுவொன்றை நியமித்துச் செயற்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.
அதேநேரம் மலையகத்திலிருந்து பெண்பிள்ளைகளைப் பிற இடங்களுக்கு வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்ல முயற்சிப்போர் குறித்த தகவல்களைப் பொது மக்கள் பெற்றுக்கொடுத்தால், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மஸ்கெலியாவைச் சேர்ந்த இரண்டு யுவதிகளின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை (02) நடைபெறுவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த யுவதிகளின் குடும்பத்தவர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறிய பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, சிலர் அறிக்கைகளை வெளியிட்டதோடு அந்த யுவதிகளின் பிரச்சினையைக் கைவிட்டு விட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் பணிப்பெண்களாகக் கட மையாற்றிய மஸ்கெலியாவைச்சேர்ந்த இரண்டு யுவதிகள், கறுவாதோட்டம் கழிவு நீரோடைப் பகுதியில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இவர்களின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகப் பெற்றோர் முறைப் பாடு செய்ததையடுத்து சடலங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் யுவதிகளின் தாயாரை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாளைய தினம் நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின் போது சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.