இந்தோ னேஷியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்துக்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பார்கள் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷிய நேரப்படி நேற்று மாலை 5.16 மணியளவில் இந்த பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 7.6 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
இதன் தாக்கம் சிங்கப்பூரிலும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும் உணரப்பட்டது. இதில் சுமத்ரா தீவின் பாடங் பகுதியில் பல கட்டிடங்கள் இடிந்து நொறுங்கின. இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்தனர். சுமார் 100 முதல் 200 பேர் வரை பலியாகி இருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால், மேலும் பல கட்டிடங்களில் மக்கள் ஆயிரக்க்கணக்கில் சிக்கியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர்களும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் அந்நாட்டு சுகாதார துறையின் கீழ் வரும் இயற்கை சீரழிவு மேலாண்மை துறை தலைவர் ரஸ்தம் பகாயா, இறந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.