சீனா அதன் 60வது தேசிய தினத்தை நேற்று கோலாகலமாகக் கொண்டாடியது. பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்புடன் பல விசேட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
சீனாவில், 1949ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி, கம்யூனிச ஆட்சி மலர்ந்தது. சீனாவின் மாபெரும் தலைவர் மா சேதுங்கின் புரட்சியை அடுத்து, இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடந்தது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி, சீனாவின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.
சீனாவில் கம்யூனிச ஆட்சி மலர்ந்ததன் 60வது ஆண்டு விழா, நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் பீஜிங் விழாக்கோலம் பூண்டிருந்தது. வரலாற்று சிறப்பு மிக்க தினான்மென் சதுக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
சீனாவின் பலத்தை சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு நடந்தது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இந்த அணி வகுப்பில், சீனாவில் தயாரான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு குண்டுகளை ஏந்திச் சென்று, மிக நீண்ட தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் வகையிலான ஏவுகணைகள், நவீன டாங்கிகள் ஆகியவை பங்கேற்றன. போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில், கண்கவர் வாண வேடிக்கையும் நிகழ்த்தி காட்டப்பட்டது. பிரம்மாண்ட அணிவகுப்பை சீன அதிபர் ஜிண்டவோ பார்வையிட்டார்.