மலையகப் பகுதிகளில் மண்சரிவு அபாயம்: வீடுகளுக்கு சேதம்; போக்குவரத்து துண்டிப்பு

011009rain-in-upcountry.jpgநாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக மலையப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையுடன் கடும் காற்றும் வீசுவதால், மின்சாரக் கம்பங்களும், தொலைத் தொடர்புக் கம்பங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன. ஹட்டன் வனராஜா பகுதியில் பாரிய கல்லொன்றும், மரமொன்றும் சரிந்துள்ளது. இதன்போது அந்த வழியால் சென்ற பால் வேனொன்று சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஹட்டன், வட்டவளை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கினிகத்தேனை, ஹட்டன் வீதியில் மழை காலங்களில் மண்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பகுதியில் சிறு மினிசூறாவளி எனக் கருதப்படும் அளவுக்கு மரங்கள் பன்வில, கோம்பர, ஹேவாஹெட்டை, கண்டி, ஹாரிஸ்பத்துவ போன்ற பல இடங்களில் முறிந்து விழுந்துள்ளன. பிரமாண்டமான மாறாமரம் கண்டி பேராதனை வீதியில் கிங்ஸ்வூட் கல்லூரிக்கு முன்பாக உடைந்து விழுந்ததால் தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. பாடசாலை முடிவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றதால் பாரிய விபரீதம் எதுவும் இடம்பெறவில்லை.

இதே போன்று கண்டி கட்டுகஸ்தோட்டை வீதியில் வட்டாரந்தன்னையில் பாரிய மாமரம் ஒன்றும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கள் சில மணி நேரம் தடைப்பட்டன. உடனடியாக இந்த மாம ரம் வீதி அதிகார பிரிவினால் அகற்றப்பட்டது. இவ்வாறு பெய்யும் அடைமழையினால் மலையகத்தில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்படலாம் என தேசிய கட்டட நிர்மாண ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த பூகற்பவியல் அதிகாரி எம். எம். சி. டபிள்யூ. மொரேமட தெரிவித்தார். மண்சரிவுகள் குறிப்பாக சப்ரகமுவ, மத்திய ஆகிய பிரதேசங்களில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு எனவும் அவர் தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழை, சூழல் காற்றினால் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இறக்குவானை பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

பெல்மதுளை வன்னியாராச்சி கிராமத்தில் நேற்று இடம்பெற்ற கடும் மழை, சூழல் காற்றினால் வீட்டுக் கூரை அள்ளுண்டு சென்றுள்ளது. இதேவேளை இறக்குவானை டெல்வீன் ஏ பிரிவில் மரமொன்று சரிந்து விழுந்ததால் தோட்டத் தொழிலாளியின் வீடு பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. இறக்குவானை பல பகுதிகளில் நேற்று முதல் மின்வெட்டு இடம் பெற்றுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *