உலக குடியிருப்பு தினம் இன்று (திங்கட்கிழமை) சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
“எமது நகரத்தின் எதிர்காலத்தைத் திட்டமிடுவோம்” என்ற தொனிப் பொருளில் இந்த வருடத்திற்கான உலக குடியிருப்பு தினம் நினைவு கூரப்படுகின்றது.
இலங்கையில் குடியிருப்பு தினத்தை அனுஷ்டிப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சு மேற்கொண்டுள்ளது.
உலக குடியிருப்பு தினத்தின் நிமித்தம் வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சு நடாத்திய கட்டுரை மற்றும் சித்திரம் வரைதல் தமிழ் மொழி மூலப் போட்டிகளில் வவுனியா, நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள பாடசாலை மாணவ, மாணவிகளே முதலாம், இரண்டாம் மூன்றாம் இடங்களை வெற்றிபெற்றுள்ளனர்.
இவர்களுக்கான பரிசில்கள் உலக குடியிருப்பு தினமான இன்று 5ம் திகதி வழங்கப்படவிருக்கின்றது.
உலக குடியிருப்பு தினத்தின் தேசிய மாநாடு நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் அமைச்சர்கள் பேரியல் அஷ்ரஃப், தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் இன்று நடைபெறுகின்றது.
இவ்வைபவத்தில் மேற்படி மாணவ, மாணவிகளுக்குப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. தமிழ் மொழி மூலக் கட்டுரைப் போட்டியில் கனிஷ்ட பிரிவில் தர்மபுரம் நலன்புரி நிலையத்தைச் சேர்ந்த பிரிமேகன் அபிலாஷா முதலாமிடத்தையும் சிரேஷ்ட பிரிவில் தர்மபுரம் நலன்புரி நிலையத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் அனித்தா முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு பத்தாயிரம் ரூபாவும் வெற்றிக் கிண்ணமும் சான்றிதழும் வழங்கப்படும்.