கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்தோனேசியாவில் ஒரு கிராமமே சேற்றில் புதைந்து, மக்கள் அனைவரும்பலியாயிருப்பது தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவை கடந்த வாரம் மிகப்பெரிய நிலநடுக்கம் தாக்கியது. இதனால் சுமத்ரா தீவு பகுதியே ஆட்டம் கண்டது. கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை இடிந்து விழுந்ததில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகிவிட்டனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இவர்களுடன் ஜப்பானிய குழுவினரும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமத்ரா தீவு தலைநகர் படாங் பகுதியில் இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்ட மீட்பு குழுவினர் அடுத்ததாக அங்கிருந்து 2 கிமீ தூரத்தில் இருக்கும் லுபக் லாவே உட்பட மேலும் 2 கிராமங்களில் மீட்பு பணிகளுக்காக சென்றனர். இந்த மூன்று கிராமங்களுக்கும் அருகில் ஒரு எரிமலை உள்ளது. அங்கு சென்ற மீட்பு படையினர் லுபக் லாவே என்ற கிராமமே ஒரு பெரிய சேற்றில் புதையுண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அந்த கிராமத்தில் இருந்த 200 பேரும் பலியாகிவிட்டனர். மேலும், நிலநடுக்கத்தன்று நடந்த திருமணத்தில் பங்கேற்க வந்த சுமார் 40க்கும் மேற்பட்ட மக்களும் இறந்துவிட்டனர். சேற்றின் மீது வேரோடு பிடுங்கப்பட்டு புதையுண்ட சில மரங்களின் பாகங்கள், சில பொம்மைகள் ஆகியவை மிதக்கின்றன. இது குறித்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் பாபி ஹெரியன்டோ என்பவர் கூறுகையில், நாங்கள் மூன்று அடி ஆழத்துக்கு சேறுகளை நீக்கிவிட்டு இந்த உடல்களை மீட்டோம். இதற்கு சுமார் மூன்று மணி நேரம் தேவைபட்டது. தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்
இது போல் சுமத்ரா தீவில் மேலும் சில இடங்களில் சேற்றுசரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு சேதம் சிறியளவில் தான் இருக்கிறது. பயப்பட தேவையில்லை என்றார்.