இலங் கையின் பாதுகாப்பு படையினருக்கு எதிராகப் பாலியல் குற்றம் சுமத்தும் நாடுகள் அக்குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் நிரூபிக்குமா என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கேள்வி எழுப்பினார். எமது பாதுகாப்பு படையினர் ஒருபோதும் பாலியல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அல்லர். இது உறுதியான விடயம். அதனால் இக்குற்றச்சாட்டைச் சுமத்தும் நாடுகள் அதனை விபரமான ஆதாரங்களுடன் வெளியிடவேண்டும் என்று சவால்விடுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாத்தறை நகரில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய ஜனாதிபதி; எமது படையினர் பாலியல் மோசடியில் ஈடுபடவில்லையெனவும் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் படையினர் மீது குற்றஞ் சுமத்த பொருத்தமற்றது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;
நாட்டை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் நம் நாட்டைப் பற்றிய தவறான கூற்றுக்களை சர்வதேச நாடுகள் வெளியிடும் இவ்வேளையில் தென் மாகாண மக்கள் தம் வாக்குப் பலத்தின் மூலம் இதற்குப் பதிலலிக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். முப்பது வருடகால பயங்கரவாதம் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியது. சகல மக்களினதும் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அதன் விளைவுகளை எவரும் மறந்து விடக்கூடாது. நாம் குறுகிய இரண்டரை வருடகாலத்தில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதி சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளோம்.
கடந்த காலங்களை மறந்தவர்களே இந்த அமைதிச் சூழ்நிலைக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் அநாவசியமான பிரச்சினைகளை கிளப்பி வருகின்றனர். மக்கள் இவர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. படையினரினால் எவ்வித பாலியல் மோசடியும் நடத்தப்படவில்லை. எமது படையினர் மனிதாபிமானமாகவே சகல சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டு வந்துள்ளனர்.
தமது உயிரை பணயம் வைத்து நாட்டைப் பாதுகாத்த படைவீரர்கள் பெண்களை பாலியல் மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டை இன்று சில சக்திகள் முன்வைத்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராக அரசாங்கத்துடனும் படையினருடனும் எமது நாட்டு மக்கள் உள்ளனர் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை யுண்டு. நாடு முழுவதிலும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தற்போது நடைபெறுகின்றன. ஒரே சமயத்தில் ஐந்து துறைமுகங்களின் நிர்மாணப் பணிகள் நடைபெறுகின்றன. மின்சாரம், கல்வி, சுகாதாரத் துறையில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன.
கிழக்கிலும் தெற்கிலும் அபிவிருத்திப் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் அபிவிருத்திப் பயணத்தை மேலும் வலுப்படுத்த தென் மாகாண மக்கள் இத் தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களித்து தமது பூரண ஆதரவை வழங்க வேண்டும். வெற்றிலைக்கு வாக்களிக்கும் அதேவேளை மூன்று விருப்பு வாக்குகளிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பல்லி
ஜயா இந்த கேள்வியே ஒரு பலமான ஆதாரம்தானே; இதைவிட தங்களால் மறைக்கபட்ட ஆதாரங்கள் தேவையா? இதெக்கெல்லாம் இனி ஜீ ஜீ பொன்னம்பலமா வந்து வாதாடவேண்டும்; தங்களது அவசரமும் தம்பியின் அவசர அமெரிக்க பயணமும் இன்னும் சில ஆதரங்கள்தான் உங்களிடம் குற்றம் புரிந்ததுக்கான ஆதாரம் கூட இருப்பதாக காட்டி கொடுத்துவிட்டதே;