நாட்டின் சில பகுதிகளில் கடும் காற்று மற்றும் மழை காரணமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 500 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் நேற்று தெரிவித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வசதிகளை உடனுக்குடன் வழங்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்டீன் நேற்று தெரிவித்தார்.
சேதமடைந்த வீடுகள் தொடர்பாக மதிப்பீடு செய்து துரிதமாக கையளிக்குமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அமைச்சின் செயலாளர் பணிப்புரை வழங்கியுள்ளார். கடும்காற்று காரணமாக புத்தளம் நகரமே கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுமார் 442 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு 1070 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.
இதேவேளை வெள்ளம் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர கம்பஹா, இரத்திபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலும் காற்று மழை காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட புத்தளம் பகுதிகளை நேற்று (4) நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சின் செயலாளர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை மரம் வீழ்ந்ததால் கொல்லப்பட்ட காலியைச் சேர்ந்த ஐயவரினதும் இறுதிக் கிரியைகளுக்காக 15 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் நகரில் கடைகள் உட்பட 442 வீடுகள் சேதமடைந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. புத்தளம் கிழக்கில் 218 வீடுகளும், மரைக்கார் வீதியில் 53 வீடுகளும் பழைய ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் 41 வீடுகளும் பெரிய குடியிருப்பு வீதியில் 133 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக புத்தளம் பிரதேச செயலாளர் கூறினார்.
கண்டியில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பலத்த காற்றின் காரணமாக மரக்கிளைகள், மரங்கள் விழுந்துள்ளதால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதோடு வீடுகளும் சேதமடைந்துள்ளன.
கடும் காற்று காரணமாக கண்டி பகுதியில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள், மாட்டுப் பட்டிகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
சீரற்ற மழை காரணமாக மரக்கறி பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் மழையுடன் கூடிய காற்றின் காரணமாக தெல் தோட்டை பிரதேசத்தில் 24 வீடுகளும் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் மூன்று லயன்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெல்தோட்டை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இதனால் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தெல்தோட்டை கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மாத்தளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய கடும் காற்று காரணமாக பாரிய மரங்கள் பல சரிந்து வீழ்ந்துள்ளன.
பல மரங்கள் மின்சார கம்பங்களில் வீழ்ந்துள்ளதால் மாத்தளை மாவட்டத்தில் பல இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு துரிதமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடும் காற்று காரணமாக கலவான தமிழ் வித்தியாலய கட்டடத்தின் மீது மரம் ஒன்று சாய்ந்து வீழ்ந்ததில் பாடசாலை கட்டடம் சேதமடைந்துள்ளது.