தென் மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் இன்று (7) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
தேர்தல் ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதோடு தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்கள் நாளை பிற்பகல் முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்க உள்ளனர். பொலிஸார் நாளை மறுதினம் (9) முதல் கடமையை பொறுப்பேற்க உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.
தேர்தலுக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் இறுதிக் கட்ட பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் ஐ. ம. சு. முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதேவேளை ஐ. தே. க., ஜே.வி. என்பனவும் பல கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
தென் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க 17 இலட்சத்து 61,859 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
670 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற உள்ளதோடு 161 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
தபால் மூல வாக்குகள் எண்ணும் 13 நிலையங்களும் இதில் அடங்கும்.
இதேவேளை தென் மாகாண சபைத் தேர்தலையொட்டி தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்கள் வெள்ளிக்கிழமை காலைக்கு முன் தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு தேர்தல் திணைக்களம் வேண்டியுள்ளது.
இதேவேளை இம்முறை தேர்தல் கடமைகளில் 16 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.