சாம்பி யன்ஸ் லீக் “டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் இன்று இந்தியாவில் ஆரம்பமாவதுடன் இதில், 12 அணிகள் போட்டியிடுகின்றன. உள்ளூர் “டுவென்டி-20′ தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரில் மோத உள்ளன.
கடந்த 2008 ம் ஆண்டு, முதலாவது சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடர் நடைபெற இருந்தது. எனினும்; மும்பை பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இத்தொடர் கைவிடப்பட்டது. தற்போது இத்தொடர் இன்று முதல் வரும் 23 ம் தேதி வரை இந்தியாவில் நடக்க உள்ளது.
ஏழு நாடுகளை சேர்ந்த மொத்தம் 12 அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளன. இந்தியா தரப்பில் ஐ.பி.எல்., “டுவென்டி-20′ தொடரின் நடப்பு சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ், இரண்டாவது இடம் பிடித்த பெங்களுர் ரோயல் சாலஞ்சர்ஸ் மற்றும் லீக் சுற்றில் முதலிடம் பெற்ற டில்லி டேர்டெவில்ஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கின்றன.
அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்காää இங்கிலாந்து தரப்பில் தலா இரண்டு அணிகளும், நியூசிலாந்து, மேற்கிந்தி தீவுகள்; இலங்கை தரப்பில் தலா ஒரு அணி வீதமும்; தொடரில் பங்கேற்க உள்ளன. பாகிஸ்தான் சார்பில் எந்த ஒரு அணியும் பங்கேற்வில்லை.
மொத்தம் உள்ள 12 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டியில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகள் 2 வது சுற்றுக்கு (8 அணிகள்) தகுதி பெறும். இதில், 2 பிரிவாக அணிகள் போட்டிகளில் பங்கேற்கும். இதன் முடிவில் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
போட்டிகள் பெங்களுர் (சின்னசாமி விளையாட்டரங்கு, ஐதராபாத் (ராஜிவ்காந்தி சர்வதேச விளையாட்டரங்கு) மற்றும் டில்லி (பெரோ ஷா கோட்லா விளையாட்டரங்கு) ஆகிய இடங்களில் நடக்க உள்ளன. இங்கு பாதுகாப்பு பலமடங்கு பலப்படுத்தப் பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் ஓட்டல்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரின் பரிசுத் தொகை இந்திய நாணயத்தில் 25 கோடி ரூபாவாகும். ஒரு கிரிக்கெட் தொடருக்கு இவ்வளவு பரிசுத் தொகை அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. இத்தொடரில் கோப்பை கைப்பற்றும் அணி சுமார் 10 கோடி ரூபா பரிசு வெல்ல உள்ளது.