ருமேனி யாவில் பிறந்த ஜெர்மனி எழுத்தாளர் ஹெர்டா முல்லருக்கு இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
56 வயதாகும் ஹெர்தா, 1987ம் ஆண்டு ருமேனியாவிலிருந்து ஜெர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். 1982ம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கியவர். அப்போது வெளியான இவரது சிறுகதைத் தொகுப்பான நிடருங்கன் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்தத் தொகுப்புக்கு ருமேனிய அரசு அப்போது தடை விதித்தது.
இருப்பினும் இந்தத் தொகுப்பின் தணிக்கை செய்யப்படாத பதிப்பு 1984ம் ஆண்டு ஜெர்மனியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ருமேனியாவில் ஒப்ரசிவ் டோங்கோ என்ற படைப்பை வெளியிட்டார் ஹெர்தா. இதுவும் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
ருமேனியாவில் இவரது படைப்புகளுக்கு பெரும் எதிர்ப்புகள், விமர்சனங்கள் எழுந்தபோதிலும் கூட ஜெர்மனியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.