மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இலங்கையின் இளம் அரசியல் தலைவராக அதிஉயர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் (09) நிகழ்ந்த விசேட நிகழ்வின்போது ஜூனியர் சேம்பர் இன்ட நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் 2009ம் ஆண்டுக்கான சிறந்த இளம் அரசியல் தலைவராக அமைச்சர் ரிஷாத் பதியுதீனை தெரிவு செய்து பாராட்டியதுடன் விருதும் வழங்கி கெளரவித்துள்ளது.
முப்படைகளின் தலைமை அதிகாரியும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான சரத் பொன் சேகா பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில், பல் வேறு துறைகளில் சாதனை படைத்த இளைய தலைமுறையினர் பத்துப் பேர் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
எட்டு வருடங்களுக்கு மேலாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வரும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இளம் வயதில் அமைச்சராகியதுடன் மட்டு மல்லாது மிக இளம் வயதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அத்துடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள முதலாவது வடமாகாண முஸ்லிம் மக்களின் பிரதிநிதி இவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வை.எம்.எம்.ஏ. சம்மேளனத்தின் 59வது வருடாந்த மாநாட்டின்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு இவ்வாண்டின் சிறந்த ஆளுமைக்கான உயர் விருது வை.எம்.எம்.ஏ. சம்மேளனத்தினால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மன்னார் தாராபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் எருக்கலபிட்டி மத்திய மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி பயின்றதுடன் உயர்தரத்தை கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரியில் பயின்றார். உயர்தரத்தில் விசேட சித்தியைப் பெற்று மொரட்டுவை பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகி பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.