இலங்கை நிலவரம் குறித்து ஆராயவென ஐந்து நாள் விஜயத்தை மேற் கொண்டு நேற்று இலங்கை வந்த தமிழக எம்.பிக்கள் குழு இன்று காலை யாழ்ப்பாணம் செல்கின்றனர். இக் குழுவினரை யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோ. பற்குணராஜா யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வரவேற்பார்.
காலஞ்சென்ற எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களினது நினைவுச் சிலையைத் தரிசித்த பின்னர் இக்குழுவினர்; யாழ். பொதுசன நூலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு கூட்டமொன்று நடைபெற விருக்கின்றது. அந்த கூட்டத்தில் யாழ். மாநகர சபையின் மேயர், இந்திய தமிழக பா.ஊ.களுக்கு நினைவுப் பரிசு ஒன்றினையும் வழங்கி கௌரவிப்பார்.
இக்குழுவினர்ää அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் இடம்பெயர்ந்த மக்களையும்; சந்திப்பர்.
எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர்கள் தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசவுள்ளனர். ஜனாதிபதியையும் இவர்கள் சந்தித்துப் பேசவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன
அருட்சல்வன்
இந்திய நாடாளுமன்ற தூதுக் குழுவினரின் இலங்கைக்கான விஜயம், பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்ற இலங்கை தமிழர் தொடர்பில் ஒரு தீர்க்கமான தீர்விற்கு அடித்தளமாக அமையுமென நம்புகிறோம் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதித் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கை தமிழர் விடயத்தில் தமிழக மக்கள் மிக கவலையடைந்திருப்பதுடன் இம் மக்களின் மீட்சிக்காக பெரும் பங்களிப்பை நல்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதை நாம் அறிவோம். அந்த நோக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் நேரடி விஜயம் பயன்படும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவார்கள் என்று கனிமொழி கூறியிருப்பது எமக்கு பெரும் நம்பிக்கையை தந்திருக்கிறது. இவர்களின் சுயாதீன செயற்பாடு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வாழுகின்ற சிறுபான்மை தமிழ் மக்கள் தொடர்பில் இதுவரை வெளிவராத பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று எண்ணுகிறோம்.
இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழுகின்ற மலையக பிரதேசங்களுக்கு இக் குழுவினர் வருகைதரவுள்ளதாக அறிகிறோம்.அவ்வாறு அவர்களின் மலையக விஜயத்தின்போது நேரடியாக தோட்டங்களுக்கு சென்று ஆராய்ந்து அதை உரிமையற்று அடிமைகளாக வாழுகின்ற எமது மக்களின் நிலமையை இந்திய மற்றும்,தமிழக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.
மொத்தத்தில் வடக்கில் அகதிமுகாம் வாடுகின்ற மக்களின் விரைவான மீள்குடியேற்றத்திற்கு நடைமுறை சாத்தியமான தீர்வுத்திட்டத்தை இன உணர்வோடு முன்வைப்பதற்கும். இலங்கை தமிழ்களின் அகதி நிலiமைக்கும் அனாதை நிலமைக்கும் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் சந்தர்ப்பமாக இந்திய வாடுகின்ற தூதுக்குழுவின் விஜயத்தை கருதுகின்றோம். ” என தெரிவித்துள்ளார்.
அருட்சல்வன்
இடம்பெயர்ந்துள்ள மக்களை உடனடியாக சொந்த இடங்களில் குடியமர்த்தி சிதைந்த தேசத்தை அவிருத்தி செய்து இழந்த வாழ்வை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுங்கள்.
நிரந்தரமான உரிமையற்ற அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு நிரந்தரமான வாழவுரிமையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுங்கள் என்று தமிழகத்தில் இருந்து இலங்கை வந்துள்ள தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரிடம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அக்குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். இந்தச் சந்திப்பின் பின்னர் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அன்புக்குரிய தமிழக அரசியல் பிரதிநிதிகளுக்கு!
உங்களுடைய வருகை எங்கள் மக்களிடத்தில் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இன்றைக்கு தமிழ் மக்கள் அவதியான காலத்திற்குள் சிக்குப்பட்டுக் கிடக்கிறார்கள். மிக பிரமாண்டமான முட்கம்பி வேலிகளுக்குள் அவர்கள் பெரிய ஏக்கத்துடன் இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளை இங்கே உங்களால் பாடக்க முடிகிறது. உங்களிடத்தில் எங்களால் எல்லாவற்றையும் இப்படியான முற்றுகைத் தருணத்தில் பேசிவிட முடியாது.
அப்படி ஒரு சூழல் எங்களுக்கு இல்லை என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்களது பயணம் எப்படியானது எதற்காக நிகழுகிறது என்பதைக்கூட அதன் சாட்சியத்திற்கு வலுத்தருகிற விதமாக அல்லது எங்கள் பாடுகளை சொல்லுகிற விதமாக கூட இந்த வாழ்வுச் சூழலும் இங்கு நடந்த உரையாடல் சூழலும் இல்லை என்பதுதான் எங்கள் துக்கமாக இருக்கிறது.
மிகவும் கொடுமையான யுத்தம் நடந்த பிறகு அதன் விளைவாக பெரியதாய் விளைந்து போய்க்கிடக்கிறது இன்றைய எமது மக்களின் துயரங்கள். எங்கள் மாணவர்கள் கால்களை, கைகளை, மனங்களை இழந்து யுத்தின் விளைபொருட்களாக இங்கு வந்திருக்கின்றார்கள்.
சமூக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். கல்வியையும் மாணவத்தன்மையையும் முழுமையாக இழந்து கற்க முடியாத நிலையிலேயே வந்திருக்கிறார்கள். இதை யாரால், எப்படி ஈடு செய்ய முடியும்? இந்த விளைவுகளுக்கு எல்லோருமே காரணமாக இருந்தவர்கள். யுத்தம் முடிவடைந்தது உயிரழிவை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. போதும் என்ற வெறுப்பையும் உலகத்தால் கைவிடப்பட்ட கையறு நிலையையும் உணர்த்தியிருக்கிறது.
நடந்து முடிந்தவைகள் தொடர்பான விசாரணைகளைப் பற்றியும் அதற்கு காரணானவர்கள் மீதான குறை கூறுதலைப் பற்றியும் நாம் எதைப் பேசியும் பிரயோசனமில்லை என்றே நினைக்கிறோம். அது ஒட்டு மொத்த உலகம் அதன் ஒழுங்கு, அதிகாரம் பற்றிய சாமானிய சனங்களின் கேள்வியாக இருக்கும்.
இன்று இங்கு நீங்கள் பார்க்கப்போகிறவைகள் பற்றி நீங்கள் கலைஞர் அவர்களுக்கு என்ன அறிக்கை கொடுக்கப்போகிறீர்கள்? அவர் பிரதமருக்கு அதை அனுப்பி வைக்கும்பொழுது என்ன நடக்கப்போகிறது? என்ற கேள்விகள் அல்லது எதிர்பார்ப்பு எமக்கு இருக்கிறது. உண்மையில் எங்கள் மக்களுக்கு விமோசனம் தருகிற விடயங்கள் நடக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.
மக்கள் யுத்த களத்தில் எல்லாவிதமான துன்பங்களையும் அனுபவித்து விட்டு வந்து தற்போது முட்கம்பிச்சிறைக்குள் வார்த்தைகளால் குறிப்பிட முடியாத துயரத்தை அனுபவிக்கிறார்கள். மக்களை உடனடியாக சொந்த இடங்களில் குடியமர்த்தி சிதைந்த தேசத்தை அவிருத்தி செய்து இழந்த வாழ்வை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுங்கள்.
நிரந்தரமான உரிமையற்ற அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு நிரந்தரமான வாழவுரிமையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுங்கள் என்ற இரண்டு கோரிக்கைகளையும்தான் எமது மாணவர்கள் சார்பாக மக்களுக்காக உங்கள் முன் தருகிறோம்.
தமிழ் மக்களாக அவர்களின் மாணவர்களாக இருந்து கொண்டு இந்தக் கோரிக்கைகளையே உங்களிடம் முன் வைக்கிறோம். தமிழ் மக்களின் அரசியல் தொடர்பாக ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே அதாவது 30 வருடத்திற்கு மேலாக எல்லோருடனும் பேசிவருகிறோம். ஏமாற்றங்களும் படுதுயரங்களும்தான் எமக்கு கிடைத்திருக்கின்றன.
Sampanthan
சம்பந்தனுடன் திமுக-காங். குழு சந்திப்பு ;இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் குறித்து ஆலோசனை
வீரகேசரி இணையம் 10/11/2009 12:20:58 PM – நலன்புரி முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை மீளக் குடியமர்த்துவதில் இலங்கை அரசு உள்நோக்கத்துடனேயே தாமதத்தை ஏற்படுத்தி வருவதாகஇலங்கை வந்துள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் குழுவிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்கள் நிலை தொடர்பாக நேரில் ஆராய்வதற்காக சனிக்கிழமை பிற்பகல் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் குழு இலங்கை வந்துள்ளது.
இக்குழு நேற்று கொழும்புக்கு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்து கலந்துரையாடியது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இதன் போது இடம் பெயர்ந்த மக்களின் நிலை குறித்து திமுக கூட்டணிக் குழுவிடம், தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் சம்பந்தன், எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், என்.சிறீகாந்தா , பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டதாகத் தெரிவித்த சம்பந்தன், தடுப்பு முகாமில் உள்ள மக்கள் விரைவில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் இந்த மக்களின் மீள் குடியேற்றத்துக்குப் பிரதான தடையாக இருப்பதாக அரசு தெரிவிக்கின்ற போதிலும், கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் எங்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பதை எங்களைச் சந்தித்த எம்.பிக்கள் குழுவிடம் தெரிவித்தோம்.
இதில் தேவையற்ற தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக பெறக்கூடிய உதவிகளைப் பெற்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அந்தப் பணியை மேலும் துரிதமாக மேற்கொண்டிருக்க முடியும்.
மேலும், சில, பல காரணங்களுக்காக சில மாவட்டங்களில் இந்தப் பணியை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் அரசு செயற்படுவதாக நாம் சந்தேகிக்கப்பட வேண்டியிருக்கின்றது.
கண்ணிவெடிகளையும், இடம்பெயர்ந்த மக்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் ஊடுருவியிருப்பார்கள் என்பதனை காரணம் காட்டி மீள் குடியேற்றத்தை காலம் தாழ்த்தாமல் அதனை அரசு துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.
மக்கள் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.தற்போதைய நிலைமையில் இங்குள்ள் மக்கள் யார் என்பது குறித்து அரசு சரியாக அடையாளம் கண்டுள்ளதாகவே எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது.
எனவே மக்களை தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். யாராவது இவ்விதம் திரும்பிச் செல்ல முடியாதிருந்தால் அவர்களை தமது உறவினர்கள் நண்பர்களுடன் தங்கியிருப்பதற்கான வசதிகள் செய்யப்பட வேண்டும்.
இடம்பெயர்ந்த இந்த மக்களை இவ்விதம் அடக்கி, ஒடுக்கி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலைமையில் ஒரு மாற்றம் வரவேண்டும் என்பதை நாங்கள் தெளிவாக இந்தியக் குழுவினருக்கு விளக்கிக் கூறியிருக்கின்றோம்.
போர் முடிவடைந்த பின் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளரும், பாதுகாப்பு ஆலோசகரும் இடம்பெயர்ந்த மக்கள் 180 நாட்களுக்குள் மறு குடியமர்த்தப்படுவார் என்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டார்கள்.
ஆனால் இதில் 130 நாட்கள் சென்றுவிட்டது. இன்னும் 50 நாட்கள்தான் இருக்கின்றதன. எமது கணிப்பின்படி இக்காலப் பகுதியில் இந்த முகாமில் இருந்து சுமார் 25 ஆயிரம் மக்கள்தான் வெளியே வந்திருக்கின்றார்கள்.
இது போதிய முன்னேற்றம் அல்ல. அவர்கள் இந்தியாவுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, அதனை நிறைவேற்றச் செய்வதற்கு இந்தியா தனது அரசியல் செல்வாக்கைப் பிரயோகிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்” என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்