உலக உணவு நாள் (World Food Day) – புன்னியாமீன்

15-hunger2.jpgஉலக உணவு நாள் ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் திகதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐக்கிய நாடுகள் இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது.

இத்தாலியில் உரோமைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பொதுவாக உணவு, விவசாய அமைப்பென அறியப்படும் ‘ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின் போஷாக்கினை அதிகரிப்பதற்கும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும்,  விவசாயத்தையும்,   உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும், சந்தைப்படுத்தல்,  விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினியை போக்குவதற்காகவும் பாடுபடுகின்றது. இதன் இலச்சினையிலுள்ள fiat panis என்பதன் பொருளானது “ரொட்டி (இலங்கையில்: பாண்) ஆவது மனிதனுக்கு இருக்கவேண்டும்” என்பதாகும்.

ஐக்கியநாடுகள் சபையின் உணவு விவசாய நிறுவனம் 1945 ஆம் ஆண்டு கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தலைமை அலுவலகமானது ஐக்கிய அமெரிக்காவில் இருந்து உரோமுக்கு மாற்றப்பட்டது.  ஆண்டு தோறும் உரோமில் உணவு விவசாய நிறுவன தலைமையகத்தில் பிரதான வைபவம் இடம்பெறுவது வழமையாகும்.  11 ஏப்ரல் 2006 இல் 190 அங்கத்துவ நாடுகளைக் கொண்டிருந்த இவ்வமைப்பில் தற்போது 192 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.இந்த அமைப்பின் முதன்மை இலக்குகளை நோக்குமிடத்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உதவிகளை அதிகரித்தல்,  இந்நாட்டு மக்களின்  போஷாக்கினை அதிகரித்தல், உணவு,  விவசாயம்,  காடுகள்,  மீன்பிடி பற்றிய அறிவினை வளர்த்தல்,   இவை குறித்து அரசுகளுக்கு ஆலோசனை வழங்குதல்,  உணவு மற்றும் விவசாயப் பிரச்சினைகளை நடுநிலையுடன் அலசி ஆராய்ந்து அவை தொடர்பாக பக்க சார்பற்ற கொள்கைகளை உருவாக்குதல் போன்றனவாகும்.

உலகளாவிய ரீதியில் உணவு விவகாரம் தொடர்பிலான ஒவ்வொரு தொனிப்பொருளின் கீழ் உலக உணவுதினம் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. இவ்வாண்டு அக்டோபர் 16ம் திகதி 29வது உலக உணவு நாளாகும். ‘நெருக்கடியைச் சமாளித்து,  தானியப் பாதுகாப்பை நனவாக்குவதை” ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இவ்வாண்டின் உலக உணவு நாளின் தலைப்பாக அறிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு இத்தினத்தின் கருப்பொருள் “உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்” என்பதாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய  அமைப்பின் 20வது பொது மாநாட்டில் அதாவது நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இத்தினம் சர்வதேச தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வமைப்பின் ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் பிரேரணை ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது இந்நாள் கொண்டாடப்படுகிறது.

நிதி நெருக்கடி,  தானிய நெருக்கடியைத் தீவிரமாக்கியது என்று ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரிகளும் நிபுணர்களும் குறிப்பிட்டிருந்தனர். குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை வகுத்து,  நிதி நெருக்கடியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியளித்து,  நெருக்கடியைக் கூட்டாகச் சமாளிக்குமாறு பல்வேறு நாடுகளுக்கும் இவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் விளைவாக தானியப் பாதுகாப்பு நனவாக்கப்பட முடியும் என்று அது கூறியுள்ளது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும்,  இதற்காக பாடசாலைக்கு அனுப்புதல்,  உடைகள் வாங்குதல்,  அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளதை இவ்விடத்தில் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.

ஐ.நா. ஏஜென்சியின் சர்வதேச உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார்(2009) இது பற்றிக் கூறுகையில்,  உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவையாகும் என்றார். உலக அளவில் 2015ம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பட்டினியால் தவித்து வரும் இந்த 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசர நடவடிக்கையாக மாறியுள்ளது. அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டியது காலத்தின் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உணவு கிடைக்காமலும்,  போதிய போசாக்கின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது என்பது விஞ்ஞான தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் இந்த யுகத்தில் ஆச்சரியப்பட வேண்டிய ஓர் தகவலாகும். அதே நேரம் பல பில்லியன் கணக்கான டொலர்களை சந்திரனையும், வான்வெளியையும் ஆராய மேற்குலக நாடுகள் செலவளித்துக் கொண்டிருக்கிறன.

உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது. சோமாலியாவில்,  வன்முறையும்,  உள்நாட்டுப் போரும் நாட்டையே உருக்குலைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, சண்டையில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்த நாட்டில்,  ஒரு குடும்பம்,  தனக்குத் தேவையான உணவு,  குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளதெனவும், கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலர்களாக இருந்தது. அது இந்த செப்டம்பர் மாதம் 171 டொலராக அதிகரித்துள்ளதெனவும் புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன..

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையும்,  உடைகள் எடுப்பதையும் சோமாலியா மக்கள் விட்டு நீண்ட நாட்களாகி விட்டன. பலர் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்த நாட்டில்,  சத்தான உணவு கிடைக்காததால்,  ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது எனக்கூறப்படுகிறது. ஆபிரிக்கா முழுவதிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.

கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய்விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். உலகம் முழுவதும் பட்டினி மற்றும் போசாக்கான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது. விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழ்ந்து போய் விட்டது.

1980ம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006ல் இது 3.8 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளில் இது இலேசான உயர்வைக் காட்டி நிற்கின்றது. ஆனால் போதுமானதாக இல்லை.

உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதும் பட்டினிச் சாவுகள் பெருமளவில் இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.

2009 ஆண்டு உலக உணவு நாளின் கருப்பொருள் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதும் உணவு பாதுகாப்பை நனவாக்குவதும் என்பதாகும். உலகப் பொருளாதார நெருக்கடி வளரும் நாடுகள் உள்ளிட்ட முழு உலகின் உணவுப் பாதுகாப்பு நிலைமைக்கு மாபெரும் சவாலையும்,  பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மாற்றியமைக்கும் வகையில்,  உலக உணவு அமைப்பு முறையிளான சீர்திருத்தத்தை வெகு விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட 2009ம் ஆண்டு உலக உணவு நெருக்கடி நிலைமை பற்றிய அறிக்கையில் தெரிவித்துள்

முதலாவதாக,  பொருளாதார நெருக்கடியும் உணவு நெருக்கடியும் கூட்டாக ஏற்பட்டன. 2006ம் ஆண்டு முதல், 2008ம் ஆண்டு வரையான காலத்தில்,  உணவுப் பிரச்சினை முழு உலக தானிய விலையை உயர்த்தியுள்ளது. 2008ம் ஆண்டில் இருந்ததை விட தற்போதைய தானிய விலை தணிந்துள்ள போதிலும்,  இன்று வரை ஒப்பீட்டளவில் உயர் நிலையிலேயே இருந்து வருகின்றது.

இரண்டாவதாக,  உலகளவில் மிகப் பெரும்பாலான நாடுகளை இந்த பொருளாதார நெருக்கடி பாதித்துள்ளது. எனவே,  நாணய மதிப்பிறக்கம்,  கடன் மற்றும் சர்வதேச உதவி ஆகிய முறைகள் பெருமளவிற்கு இப்பாதக நிலையை ஊக்குவிக்கின்றன.

மூன்றாவதாக,  உலகப் பொருளாதார ஒருமைப்பாட்டுப் போக்கு தொடர்ந்து விரிவடையும் நிலையில் குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சர்வதேசச் சந்தை பாதிப்படைகிறது. தற்போது,  பல நாடுகளின் வர்த்தகத் தொகையும் முதலீட்டு புழக்கமும் பன்முகங்களிலும் குறைவதுடன்,  வணிக நிலுவை,  வெளிநாட்டு நேரடி முதலீடு,  வளர்ச்சி உதவி ஆகியவையும் குறைவடைந்துள்ளன. இதனால் வேலை வாய்ப்பு மற்றும் வருமான பிரச்சினைகள் முனைப்பாயுள்ளன. அத்துடன்,  உணவுப் பாதுகாப்பில் பல்வேறு நாடுகளின் அரசுகள் வழங்கிய நிதியளவும் தொடர்ந்து குறைந்தே வருகின்றன..

உணவு பாதுகாப்பை நனவாக்குவதற்கு சர்வதேசச் சமூகம் மேலதிக முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். குறுகிய காலத்தில் பார்க்கும் போது,  தற்போதைய உலகின் பட்டினி மக்கள் தொகையின் பரவல் நிலைமையை அறிந்து தெளிவுபடுத்துவது,  உணவு பற்றுக்குறைக்கான உதவி மற்றும் நிதி ஆதரவை முன்கூட்டியே வழங்குவது,  வேலை வாய்ப்பை அதிகரிப்பதுடனான  திட்டங்களை வகுப்பது ,  விவசாய அதிகரிப்பையும் தானிய உற்பத்தியையும் பொருளாதார வளர்ச்சியையும் முன்னேற்றுவது,  விவசாயத்தை நவீனமயமாக்க விவசாய உற்பத்திச் சாதனங்களையும் தொழில் நுட்பத்தையும் வழங்குவது உள்ளிட்ட வகையில் உணவுப் பாதுகாப்பு அமைப்பு முறையை மேம்படுத்த வேண்டும்.

நீண்டகாலத்தில், வளரும் நாடுகளின் வேளாண்மை உற்பத்தித்திறனை உயர்த்தும் வகையில்,  முதலீட்டை மேலும் அதிகரிப்பது,  பொருளாதார அதிகரிப்பை தூண்டி, வறுமை மற்றும் பட்டினிப்பிரச்சினையைக் குறைக்க முக்கியமாக பங்களிக்கும். 2008ம் ஆண்டு,  முழு உலக தானியங்கள் உற்பத்தியளவு 224 கோடியே 50 இலட்சம் தொன்களைப் பிடித்துள்ளது. இது வரலாற்றில் கூடிய அதிகரிப்பாகும். ஆனால்,  வளர்முக நாடுகளின் உற்பத்தியளவு 1.1 விகிதத்தால் மட்டுமே உயர்ந்துள்ளது. சீனா,  இந்தியா,  பிரேசில் உள்ளிட்ட விவசாய வல்லரசுகளை கருத்தில் கொள்ளாத நிலையில்,  இதரஅபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் தானிய உற்பத்தியளவு 0.8 வீதத்தால் குறைந்துள்ளது.

தற்போது,  உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையிலான சார்பளவு மேன்மேலும் நெருக்கமாகி வருகின்றது. உணவு பாதுகாப்பு அமைப்பு முறையிலான தொடர்பு தொடர்ந்து ஆழமாகி வருகின்றது. உலக உணவு பாதுகாப்பை பொருளாதார நெருக்கடி கடுமையாக பாதிக்கும் வேளையில்,  பல்வேறு நாடுகளின் அரசுகள் நிதி நிர்ப்பந்தத்தை எதிர்நோக்கிய போதிலும்,  விவசாயத்துறை மீதான ஆதரவு ஆற்றலை குறைக்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தைப்  போன்று உலக உணவு தினம் முன்னென்றுமே கூடுதலான அளவுக்கு அர்த்தம் பொதிந்ததாக இருந்திருக்க முடியாது. உலகில் உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்திருப்பதன் விளைவாக பட்டினியில் வாடுவோரின் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது. தாராளமாக வளங்கள் இருக்கின்ற போதிலும், உலகிலே சுமார் 85 கோடி 40 இலட்சம் மக்கள் நீடித்தபட்டினியில் உழலுகிறார்கள் என்று கடந்த 2007 ஆம் வருடத்தைய உலக உணவு தினத்தை முன்னிட்டு விடுத்த செய்தியில் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கிமூன் தெரிவித்திருந்தார். இந்த எண்ணிக்கை தற்போது மேலும் சில கோடிகளினால் நிச்சயம் அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உணவு விவசாய நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாடொன்றில் ஐ.நா.செயலாளர் நாயகம் முன்னிலையில் 181 அரசாங்கங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பின் தாக்கங்கள் குறித்தும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்தனர். உலகமானது அதிவேகமாக அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் வகையில் விவசாய உற்பத்திகளை உடனடியாக அதிகரிக்க வேண்டியுள்ளது எனவும்,  இல்லையேல் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு அது அச்சுறுத்தலாக அமையும் எனவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2007 ஆம் ஆண்டு மத்தியிலிருந்து உணவுகளுக்கான செலவினமானது உலகளாவிய ரீதியில் 40 சதவீதமளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கமரூன்,  புர்கின்கா பஸோ,  ஹெயிட்டி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உணவு விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. “நாங்கள் தவறு எதனையும் செய்யவில்லை. பிரச்சினை பாரியதாக உள்ளது. நாங்கள் சரியான உதவி வழங்கினால் தீர்வுகள் கிட்டும்” என பான் கீமூன் தெரிவித்திருந்தார். கடந்த மூன்று வருடத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் உலகமானது அது உற்பத்தி செய்வதைவிட கூடுதலான அளவு நுகர்கிறது என்பது மட்டும் நிச்சயம்” என பான் கீமூன் குறிப்பிட்டிருந்தார் . எண்ணெய் விலைகள் உயர்ந்தமை,  அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, இயற்கை அனர்த்தங்கள் என்பனவே உலக உணவு விலையேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டமானது 80 நாடுகளிலுள்ள 73 மில்லியன் மக்களுக்கான உணவுகளைப் பெற்றுக்கொடுக்க வருடாந்தம் 750 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்க திட்டமிட்டுள்ளதாக பான் கீமூன் கூறினார். உலக பொருளாதார வரைவிலக்கணங்களுக்கு அமைய அல்லாமல் உலகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை கருத்திற்கொண்டு உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதாக அவர் இதன்போது வலியுறுத்தினார். 2015 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமையை அரைவாசியாகக் குறைப்பது என ஐக்கிய நாடுகள் சபையில் 2000 ஆம் ஆண்டு உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிலேனியம் இலக்குகள் எட்டப்படாத நிலையிலேயே உள்ளன என பான் கீமூன் குறிப்பிட்டார். “நாம் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் பன் மடங்கு முயற்சிக்க வேண்டியுள்ளது” என அவர் தெரிவித்தார்.பான் கீமூன் இவ்வாரம் லைபீரியா,  புர்கினா பஸோ மற்றும் ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது என்பது அவரின் வாதமாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *