காசாவில் இஸ்ரேல் தீவிர படை நடவடிக்கை மேற்கொண்டிருந்தது மத்தியகிழக்கிலுள்ள காசா பகுதி மீது இந்த வருடத்தின் முற்பகுதியில் நடைபெற்ற இஸ்ரேலிய படை நடவடிக்கை குறித்த தனது விவாதத்தை ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் மீண்டும் துவக்கியுள்ளது.
இது குறித்த விசாரணைகள் தென் ஆப்பிரிக்க நீதிபதி ரிச்சரட் கோல்ட்ஸ்டோன் தலைமையில் நடைபெற்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அகிய இரண்டுமே போர்க் குற்றங்களை புரிந்ததாக குற்றம்சாட்டி, இருதரப்பும் நம்பத்தகுந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இவ்விசாரணைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான முதல் விவாதம் இரு வாரங்களுக்கு முன்பு நடந்தபோது, இப்பிரச்சினை தொடர்பான தனது பதில் நடவடிக்கைகளை ஆறு மாதங்கள் காலம் தாழ்த்துவது என மனித உரிமை கவுன்சில் முடிவெடுத்தது.
அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக முதலில் இதற்கு பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இணக்கம் தெரிவித்திருந்தார். ஆனால் பாலத்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவை மாற்றிக் கொண்டு, இது தொடர்பான விவாதம் உடனே மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.