உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) – புன்னியாமீன்

171009.jpgஉலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. உலக வங்கியின் தரவுகளின்படி 1.4 பில்லியன் மக்கள் மிகவும் வறுமைக்கோட்டின் மிகவும் அடிமட்டத்தில் வாழ்கின்றார்கள். இவர்களின் நாள் வருமானம் 1.25 டொலர் ஆகும்.

சர்வதேச ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன்,  வறுமை காரணமாக மரணமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும்,  பசிக்கொடுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபை 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்புத் தினத்தை உத்தியோக பூர்வமாக அறிவித்தது. ‘வறுமைக்கு எதிரான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வேண்டுகோள்”,  2009 ஆம் ஆண்டின் சர்வதேச வறுமை ஒழிப்பு நாளின் தலைப்பாகும்.

இந்நாள் முதன் முதலாக 1987 ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி,  வறுமை,  வன்முறை,  பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வகையில் சுமார் பத்தாயிரம் மக்கள் ‘டொர்கேட்ரோ’வின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினர். இவர்கள் உலகளாவிய ரீதியில் வறுமை நிலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோசத்தினை முன்வைத்தனர்.

வறுமை நிலை காரணமாக உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என வரைவிலக்கணப்படுத்தலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே வறுமை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது. தீவிர வறுமை நிலை என்பது நாளொன்றுக்கு 1.25  டாலர்களுக்கும் குறைவான தொகையில் ஒருவர் வாழ்க்கை நடத்துவது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம். பொதுவாக வறுமை நிலை உணவு,  சுத்தமான நீர்,  உடை, உறையுள்,  கல்வி,  சுகாதாரம்,  சமூக வாய்ப்புக்கள்,  மனித அரசியல் உரிமைகள்,  பிற சமூகங்களுடன் தொடர்புகள் அற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையைக் குறிக்கின்றது.

உலகளாவிய ரீதியில் வறுமை சடுதியாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாஷிங்டனில் நடைபெற்ற நிதி மற்றும் வளர்ச்சித் துறை மாநாட்டில் (2009) எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை,  வறிய நாடுகளுக்கான உதவிகளை செல்வந்த நாடுகள் தொடர்ந்தும் வழங்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் 185 உறுப்பு நாடுகளினதும் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் கலந்து கொண்ட நிதி மற்றும் வளர்ச்சித் துறை மாநாட்டில் நிதி நெருக்கடி நீண்டகாலத்திற்கு நீடிக்கும் பட்சத்தில் உலக வங்கிக்கான வளங்களை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 இற்குள் வறுமையை ஒழிப்பதற்கு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. வின் இலக்குகளை இந்நிதி நெருக்கடி தடம்புரளச் செய்து விடுமெனவும் இதில் கலந்துகொண்ட அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்தமை இங்கு அவதானிக்கத்தக்க விடயமாகும்.

மனிதப் பேரழிவைத் தடுப்பதற்கு நாம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள உலக வங்கியின் தலைவர் (2009) ரொபேர்ட் ஷோலிக் ஐ.நா.வின் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளான வறுமை,  பட்டினி,  கல்வி,  சமத்துவம்,  தொற்றுநோய் மற்றும் சிசுமரணம் போன்றவற்றில் பெரும்பாலானவையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார நெருக்கடியால் வறிய நாடுகளிலுள்ள சமூகங்களுக்கு செலவிடப்படும் தொகைகள் பாதிக்கப்படக் கூடாதெனத் தெரிவித்துள்ள ஷோலிக் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடனை 100 பில்லியன் வரை அதிகரிக்கும் திட்டத்தை அமைச்சர்கள் அங்கீகரிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

அத்துடன்,  பொருளாதார நெருக்கடியில் கவனத்தை செலுத்துவதை விட்டு அது வறுமையை எவ்வாறு பாதிக்குமென்பதில் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரியுள்ளார். ஷோலிக் தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது சுகாதாரம்,  கல்வி மற்றும் உணவு போன்றவற்றுக்கு செலவிட வேண்டிய தொகையை முன்பு குறைத்த தவறை மீண்டும் செய்யக் கூடாதெனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

வறுமை ஒழிப்பு,  உணவு பாதுகாப்பு உள்ளிட்ட புத்தாயிரம் ஆண்டின் மேம்பாட்டு இலக்கை (Millennium Development Goals – MDG) திட்டமிட்டபடி திட்டமிட்டபடி எட்டுவதற்கான முயற்சிகளை பலப்படுத்துவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும்,  ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனும் ஒப்புக் கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பொறுப்பேற்றதற்குப் பின்னர்,  2009 மார்ச்சில் முதல் முறையாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனை ஐ.நா. அவை அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய போதே மேற்படி இணக்கப்பாடு ஏற்பட்டது. 2000ஆவது ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர். மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் உணவுப் பஞ்சம்,  பிணி,  வறுமை,  வேலையின்மை ஆகியவற்றை ஒழிக்க அபிவிருத்தியடைந்த நாடுகள் வழங்க ஒப்புக் கொண்டுள்ள நிதி உதவிகளை நிறுத்தக் கூடாது என்றும்,  உறுதியளிக்கப்பட்ட உதவிகளை தொடர்வதன் மூலமாக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது,  புவி வெப்பமடைதலால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

ஆனால் உலகில் தற்பொழுது நிலவும் பொருளாதார பின்னடைவின் காரணமாக முன்னேறிய நாடுகளில் நிலவும் பொருளாதாரச் சூழல் புத்தாயிரம் முன்னேற்ற இலக்குகளை எட்டவதில் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பொருளாதார பின்னடைவினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் உச்சக்கட்டத்தை சந்திக்கப்போகும் 2009ஆம் ஆண்டில் ஒன்று ‘செய் அல்லது விடு’ என்ற உறுதிப்பாட்டுடன் சிக்கலை எதிர்நோக்கிச் செயல்படப் போவதாக ஒபாமா அரைகூவல் விடுத்தமையையும் இவ்விடத்தில் நினைவு கூரல் வேண்டும். 

இவ்வாறாக திட்டங்கள் தீட்டப்பட்டாலும் கூட, அரைகூவல்கள் விடுக்கப்பட்டாலும் கூட வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 12 கோடிக்கு மேல் என சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள் இராணுவ தளவாடங்கள் வாங்கும் செலவில் ஒரு சதவீதத்தை ஒதுக்கினால் கூட உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வழி செய்து விடலாம் என திட்டமிடப்பட்டது. எனினும் அனைவருக்கும் கல்வி என்பது உலகளாவிய ரீதியில் இன்று வரை கனவாகவே உள்ளது.

வசதிபடைத்தவர் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி வரவர அதிகரித்துக்கொண்டே வருகிறது. அபிவிருத்தியடையாத 48 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களில் 20 சதவீதம் பேர் உலகின் மொத்த வளங்களில் 86 சதவீதத்தை கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு கிடைப்பது வெறும் 14 சதவீதம் மட்டுமே.

ஏழ்மைக்கு முக்கிய காரணமாக ஊழல் உள்ளது. வரிய நாடுகளின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள ஊழலை வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அதிகாரிகளை வளைக்கவும்,  ஒப்பந்தங்களை கைப்பற்றவும் முறைகேடான வழிகளில் பணத்தை செலவிடும் இந்த நிறுவனங்கள் ஏழை நாடுகளின் குடிமக்களின் வரிப்பணத்தை தெரிந்தே சுரண்டுகின்றன. குற்றங்கள் அதிகரிக்க வறுமையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. வறுமையும்,  ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த சமூகத்தில்,  வன்முறையையும்,  குற்றங்களையும் தவிர்க்க முடியாது.

உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை கூடிய நாடான சீனாவில் வறுமை ஒழிப்பு சாதனை,  உலகின் வறுமை ஒழிப்பு முன்னேற்றப் போக்கைத் தூண்டி,  உலக வறுமை ஒழிப்புப் பணிக்குப் பெரிய பங்காற்றியது. என  சீன அரசவையின் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தலைமைக் குழுவின் அலுவலகத் தலைவர் Fan Xiaojian  அண்மையில் வெளியிட்ட கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார். ஐ.நாவின் புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகளில்,  வறிய மக்கள் தொகையைப் பாதியாகக் குறைப்பது என்ற இலக்கை முன்கூட்டியே நனவாக்க முனையும் ஒரு நாடாகவே சீனா உள்ளது.

அதே நேரம் இந்தியாவும் வறுமை ஒழிப்புக்காக வேண்டி பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. வறுமையில் வாடும் குடும்பங்களை ஒரே தேவையுள்ள குழுக்களாக (Common Interest Groups – CIG)  ஒன்றிணைத்து அவர்களின் முழுமையான  மேம்பாட்டிற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கும் மாவட்ட வறுமை ஒழிப்புப் திட்டத்தை உலக வங்கியின் ஆலோசனையின் பேரி்ல் 2000வது ஆண்டு முதல் மத்திய பிரதேச அரசு செயல்படுத்தி வருகின்றது. மத்தியப் பிரதேசத்தின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 2, 900 கிராமங்களில் வாழும் 3, 25, 000 மக்களை 52, 000 குழுக்களாக ஒன்றிணைத்து உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. வறுமை கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களின் வருவாய் 65 விகிதமாக உயர்ந்துள்ளது என்றும், விவசாய  உற்பத்தி 149 விகிதமாக உயர்ந்துள்ளது என்றும்,   விவசாயத்திற்கான பாசனப் பரப்பு 27 விகிதமாக அதிகரித்துள்ளது என்றும் சில புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அதே அடிப்படையில் மாவட்ட வறுமை ஒழிப்புத் திட்டம் – 2 என்ற பெயரில் 5000 கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே உலக வங்கியின் தனி நபர் மேம்பாட்டு கணக்குத் திட்டத்தின் கீழ் (Individual Development Account – IDA) 100 மில்லியன் டாலர் கடன் கொடுக்க முடிவு செய்துள்ளதாக உலக வங்கியின் இந்தியக் கிளையின் இயக்குனர் ராபர்ட்டோ ஜாகா மும்பையில் அண்மையில்  தெரிவித்திருந்தார். இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதியைக் கொண்டு சுய உதவிக் குழுக்களைப் போல கூட்டுத் தொழில் செய்யவும் இக்குழுக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி பல குழுக்கள் செய்து பலன் பெற்றும் உள்ளன என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

 மக்களை பசிக்கொடுமையிலிருந்து வெளிக்கொண்டுவர வளர்முக நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் அக்ஸன் எய்ட் நிறுவனம் 2009 இறுதிப்பகுதியில் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையில் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்திருந்தது. ஆனால் அந்த அறிக்கை பிரேசிலையும் சீனாவையும் பாராட்டியிருந்தது.

உலகில் மிகவேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா அமைந்திருந்தாலும்,  தொண்ணூறுகளின் மையப்பகுதியிலிருந்து நாட்டில் போஷாக்கின்மையால் வாடுவோரின் எண்ணிக்கை 3 கோடியால் அதிகரித்துள்ளது என்று அக்ஷன் எய்ட் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது. வறுமை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ள பிரேசில் அரசாங்கத்தை, அதன் நிலச் சீர்திருத்த திட்டங்களுக்காகவும்,  ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டங்களுக்காகவும் இந்த அறிக்கை பாராட்டியுள்ளது. சீனா தனது விவசாயிகளுக்கு உதவித் திட்டங்களை அறிவித்து 5 கோடியே 80 லட்சம் பேரை பசிக் கொடுமையிலிருந்து வெளிக்கொணர்ந்துள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னைய நிலைகளுடன் ஒப்பு நோக்கும் போது ஆசியாவின் வறுமை ஒழிப்பு ஓரளவு முன்னேற்றம் இருந்த போதிலும் கூட ஆபிரிக்க நாடுகளில் நிலமை மிகமிக மோசமாகவே இன்று வரை காணப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு உலக வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் “உலக நாடுகளை பீடித்திருக்கும் நிதி நெருக்கடிகளால் மேலும் 10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்படலாம்” என்று அச்சம் தெரிவித்திருந்தது.

தற்போது சுமார் 1.4 பில்லியன் மக்கள் தீவிர வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ள ஐ. நா.,  உணவு மற்றும் எரிபொருள் விலைகள் வானளாவ சென்றால் மேலும் 10 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

“வறுமையை ஒழிக்கும் நமது பணி மனித உரிமைகள் மற்றும் மானுட மரியாதை ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று ஐ. நா. பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார். 2015-ற்குள் வறுமையை ஒழிப்பதாக ஐ. நா. இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஏழை நாடுகள் பல இத்திட்டத்தில் மிகவும் பின் தங்கியுள்ளதாக அவர் தெரிவித்த கருத்தை இவ்விடத்தில் மீட்டுப்பார்ப்பது பொறுத்தமாக இருக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *